Aseefa Bhutto Zardari: அசீஃபா பூட்டோ சர்தாரி 2007 இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவை மணந்த ஆசிப் அலி சர்தாரியின் மகள் ஆவார்.
பாகிஸ்தான் குடியரசு தலைவர்:
பெரும் சர்ச்சைகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் வெளியான பிறகு, நீண்டகால இழுபறியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் செரிஃப் பொறுப்பேற்றார். அவரது ஆதரவுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி, பாகிஸ்தானின் குடியரசு தலைவராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் ராணுவத் தலைவர்களைத் தவிர்த்து இரண்டாவது முறையாக அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சிவிலியன் வேட்பாளர் இவர்தான். இதற்கு முன், 2008 முதல் 2013 வரை பாகிஸ்தான் குடியரசு தலைவராக ஆசிப் அலி சர்தாரி பதவி வகித்துள்ளார்.
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை:
இதைதொடர்ந்து, அவர் தனது மகள் அசீஃபா பூட்டோவை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படி நடந்தால், வழக்கமான குடியரசு தலைவரின் மனைவிக்கு வழங்கப்படும், நாட்டின் முதல் பெண்மணி (FIRST LADY) என்ற அங்கீகாரம் அசீஃபா பூட்டோவிற்கு வழங்கப்படும். பாகிஸ்தானில் நாட்டின் முதல் பெண்மணி என்ற அங்கீகாரத்தை, குடியரசு தலைவரின் மகள் பெறுவதும் முதல்முறையாக இருக்கும். முதல் பெண்மணியின் பதவி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று அல்ல, அரசு சடங்கு கடமைகளை மட்டுமே கொண்டுள்ளது. ஆயினும்கூட, அரசு அமைப்பில் மிகவும் அறியப்படும் நிலையை வகித்துள்ளனர். முதல் பெண்மணியின் பங்கு பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது.
யார் இந்த அசீஃபா பூட்டோ?
அசீஃபா பூட்டோ சர்தாரி 2007 இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவை திருமணம் செய்த ஆசிஃப் அலி சர்தாரியின் மகள் ஆவார். பிப்ரவரி 1993 இல் பிறந்த அசீஃபா, பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் பக்தவார் பூட்டோ சர்தாரிக்குப் பிறகு ஆசிப் அலி சர்தாரிக்கு பிறந்த இளைய மகள் ஆவார். அசீஃபா பூட்டோ ஜர்தாரி ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார். தொடர்ந்து, 2020ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) பேரணியில் பங்கேற்று தனது அரசியல் பயணத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. அசீஃபா பூட்டோ சர்தாரி போலியோ ஒழிப்புக்கான பாகிஸ்தானின் தூதராகவும் உள்ளார். கடந்த தேர்தலில் கூட தனது கட்சி வேட்பாளர்களுக்காக, ஆசீஃபா அலி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.