தான்சானியா நாட்டில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரந்து விரிந்த இந்த உலகத்தில் வாழும் மக்கள் தங்களின் நிலப்பரப்புக்கு ஏற்ப உணவு வகைகளை சார்ந்திருக்கின்றனர். பூச்சிகள் தொடங்கி மிகப்பெரிய உயிரினங்களையும் உணவாக எடுத்துக்கொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சில சமயங்களில் நம் உயிரை பறிக்கும் அளவுக்கு பிரச்சினையாக மாறி விடும். அப்படி ஒரு நிகழ்வு தான் தான்சானியா நாட்டில் நடைபெற்றுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியா பரந்த வனப்பகுதிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு யானை, சிங்கம், சிறுத்தை, எருமை, காண்டாமிருகம் போன்ற விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையில் இருக்கும் கிளிமஞ்சாரோ தேசிய பூங்காவும் இங்கு தான் உள்ளது. இந்த நாட்டில் உள்ள ஜான்சிபார் என்னும் இடம் கடலை ஒட்டிய பகுதியாக உள்ளது. இங்குள்ள பம்பா தீவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடல் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த இரு தினங்கள் முன்பு பெம்பா தீவில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலக்குறைவால் அம்மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 8 குழந்தைகள் உயிரிழக்கவே நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். இதில் அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட மருத்துவ அதிகாரி பக்காரி ஹாஜி கூறுகையில், “சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தோம். இதில் அவர்கள் கடல் ஆமை கறியை சாப்பிட்டது தெரிய வந்தது. இவர்கள் அனைவருமே மார்ச் 5 ஆம் தேதி கடல் ஆமை இறைச்சி சாப்பிட்டுள்ளனர். ஆனால் வெளியே சொன்னால் திட்டு விழும் என்ற பயத்தில் மார்ச் 8 ஆம் தேதி வரை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். அதன்பின் உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த பிறகு தான் இந்த உண்மை வெளிவந்துள்ளது” என கூறினார். தற்போது 78 முதியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாபியா தீவில் உள்ள பிவேனி கிராமத்தில் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் அதேபோல் சம்பவம் நடந்துள்ளது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.