கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது.


மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா:


இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.  கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ் தான் உள்ளது.


இந்த JN.1 வகை கொரோனா வைரஸ் என்பது உருமாறிய  பிரோலா (BA.2.86) வகையை சேர்ந்தது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய வகை கொரோனா தனித்துவமாகவும் வேறுபாட்டுடனும் செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை கொரோனா வைரஸ் மூலம் கூடுதல் ஆபத்துகள் ஏற்படாது என்றும், பனிக்காலம் என்பதால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பூசிகள் JN.1 வைரஸால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் அல்லது இறப்புகளை தடுக்க போதுமானதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதன் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


JN.1 வைரஸ் தொற்று:


இதுவரை இந்தியாவில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும், கோவாவை சேர்ந்த 15 பேருக்கும் JN.1 வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சிங்கப்பூரில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 56,043 பேர் இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில்,  கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்கடிதத்தில், ”மரபணு மாற்றம் அடைந்த JN.1 புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா மாதிரிகளை சேரிக்க வேண்டும்.


கொரோனா பாதித்தவர்களுக்கு மரபணு சோதனை தேவைப்பட்டால் அது சார்ந்த ஆய்வகங்களுக்கு உடனடியாக மாதிரிகள் அனுப்பப்பட வேண்டும்.  பிசிஆர் மற்றும் ஆர்டிபிசி ஆர் பரிசோதனைகளை  அதிகளவில் எடுக்க வேண்டும்.  மாநிலங்கள் தங்களது மாவட்ட வாரியான கோவிட் பாதிப்பை கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்படுகிறது. பண்டிகை காலங்கள் வர உள்ளதால், கோவிட்  வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.