Donald Trump: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில், கொலராடோ உச்சநீதிமன்றம் முன்னாள் அதிபர் டிரம்பதகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்:
2020ம் ஆண்டு நடைபெற்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவில், அப்போது அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனை ஏற்காத டிரம்பின் ஆதரவாளர்கள் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை சூறையாடினார். இதனால், நாடாளுமன்றம் அமைந்திருக்கும் பகுதியே கலவரபூமியாக மாறியது. இந்த கலவரத்தை டிரம்ப் திட்டமிட்டு தூண்டிவிட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கும் நடைபெற்று வந்தது.
டொனால்ட் டிரம்பிற்கு தொடர்பு:
தலைநகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கை கொலராடோ மாநில உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ட்ரம்ப் கிளர்ச்சிக்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் போதுமான அளவு இருக்கின்றன. பொதுவான சட்டவிரோத நோக்கத்திற்கு உதவவும், மேலும் 2020 அதிபர் தேர்தல் முடிவு தொடர்பான சான்றளிப்பதைத் தடுக்கவும், அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தை நிறுத்தவும் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்பிற்கு தடை:
மேலும், வழக்கு விசாரணையில் பங்கேற்ற 7 நடுவர்களில் பெரும்பான்மையாக 4 பேரின் முடிவின் அடிப்படையில், ட்ரம்ப் மீண்டும் அதிபர் பதவியில் இருக்கத் தகுதியற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டொனால்ட் டிரம்ப் அரசியலமைப்பின் கிளர்ச்சி விதியின் கீழ் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்தது.
”எழுச்சி அல்லது கிளர்ச்சியில்" ஈடுபட்டுள்ள அதிகாரிகளைத் தடுக்கும் அமெரிக்க அரசியலமைப்பின் அரிதாகப் பயன்படுத்தப்பட்ட விதியின் கீழ், அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்ட முதல் முன்னாள் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மேல்முறையீடு செய்ய திட்டம்:
டொனால்ட் டிரம்ப் உடனடியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதோடு, தீர்ப்பை அமல்படுத்துவதை இடைக்கால தடை கோருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டிரம்பின் பரப்புரைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், டிரம்பிற்கு அதிகரித்து வரும் ஆதரவை கண்டு சித்தப்பிரமை நிலையில் உள்ளனர். "தோல்வியுற்ற அதிபரான பைடன் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள். அதனால், அதிகாரத்தில் இருந்துகொண்டு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அடுத்த நவம்பரில் அமெரிக்க வாக்காளர்கள் பைடனை பதவியில் இருந்து தூக்கி எறிவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.