பெருந்தொற்றில் இருந்து நாம் கற்று கொண்ட முக்கிய பாடம் காலநிலை மாற்றம் என்றும் சுற்றுச்சூழலுக்கு மனிதர்கள் என்ன செய்தார்களோ இது விளைவை ஏற்படுத்தியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் இன்று தெரிவித்துள்ளார். நமது வாழ்க்கை சுற்றுச்சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.






தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பாகிஸ்தான் வெள்ளம் போன்றவற்றில் பாதிப்பின் விளம்பில் இருப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது எந்த நாட்டிலும் நிகழலாம். சமமாக அனைவரின் மீது கவனம் செலுத்த வேண்டும். பின்தங்கியவர்களுக்கு உதவுவது முக்கியம்" என்றார்.


தடுப்பூசி பற்றி பேசிய அவர், "20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் பல உயிர்களை தடுப்பூசி காப்பாற்றியுள்ளது. உயிருக்கும் ஆபத்துக்கும் இடையில் உள்ள சமநிலையில்தான் அனைத்தும் உள்ளன. அதேபோல், தடுப்பூசியை பொறுத்தவரை பாதுகாப்பு முக்கியமானது. தடுப்பூசி, நல்ல தரமாகவே உள்ளது. ஒரு மில்லியனில் 3 முதல் 4 அரிதான பாதகமான சம்பவங்களே நிகழ்கின்றன" என்றார். பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொண்ட பிறகும் பலர் கோவிட் நோயால் பாதிக்கப்படுகின்றனரே என கேட்டபோது, ​​​தீவிரமான நோயை தடுக்கவே தடுப்பூசிகள் உதவுகிறது என பதில் அளித்துள்ளார்.


"தடுப்பூசிகள் காரணமாக நாங்கள் விரைவாக குணமடைந்து வருகிறோம். உலகளவில் 13 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். அதன் காரணமாக 20 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பெரும்பாலான இறப்புகள் தடுப்பூசி இல்லாததால் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அதிக செயல்திறன் கொண்டுள்ளது. பாதுகாப்புடன் உருவாக்கப்படுகின்றன. வைரஸ் பரிணாம வளர்ச்சி அடைய முயற்சிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் ஏற்படும் பிறழ்வுகள் வைரஸை ஆன்டிபாடிகளிலிருந்து தப்பிக்க உதவுகின்றன" என செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் தடுப்பூசி நடவடிக்கைகளை பாராட்டிய அவர், மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் நாடு ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளது என்றார். "டெல்டா அலையின் போது, ​​பலருக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அதனால்தான் அதன் தாக்கத்தை நாங்கள் கண்டோம். மருந்துகள் தீவிரத்தை குறைக்க உதவியது. நீங்கள் மிகவும் நோய்வாய்ப்படாமல் தடுக்கலாம். பூஸ்டர் டோஸ் மிகவும் முக்கியமானது" என்றார்.