இந்தோனேசியாவில் கால்பந்து மிக பிரபலமான விளையாட்டாக உள்ளது. முக்கிய போட்டிகளுக்கு முன்பு, ரசிகர்களிடையே அதிகம் ஆர்வம் காணப்படும். இதனால் ரசிகர்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது.
அந்த வகையில், இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிக்கு நடுவே ஏற்பட்ட மோதலின்போது 174 பேர் பலியாகினர். விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த மிக மோசமான கலவரமாக இது கருதப்படுகிறது.
கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங்கில் சனிக்கிழமை பிற்பகல் கூட்டம் நிரம்பி வழிந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றது. உள்ளூர் கால்பந்து அணியான அரேமா, எதிர் அணியான பெர்செபயா சுரபயாவை எதிர்கொண்டது.
முன்னதாக, இரு அணிகளின் ரசிகர்களால் ஏற்படக்கூடிய கலவரத்தைத் தடுக்க அரேமா ரசிகர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பெர்செபயா 3-2 என்ற கணக்கில் வென்ற பிறகு, ஆடுகளத்தில் இருந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசினர்.
இது கலவரமாக மாறியது. ரசிகர்கள், போலீஸ் கார்களை இடித்து சேதப்படுத்தினர். இதை தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 180 பேர் காயமடைந்தனர்.
கால்பந்து ரசிகர்கள், மைதானத்திற்கு உள்ள நுழைந்ததை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பார்வையாளர்கள் மத்தியில் அச்சம் பரவியதால், ஆயிரக்கணக்கானோர் கஞ்சுருஹான் மைதானத்தில் இருந்து வெளியேற முயற்சித்தனர். அப்போது, அங்கு பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதற்கிடையே, போட்டியின்போது, கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா தெரிவித்துள்ளது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பின்புதான், நிலைமை மோசமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, "கால்பந்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இது ஒரு இருண்ட நாள். மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சோகம் நிலவுகிறது" என்றார்.
முதற்கட்ட தகவல்களின்படி, இறப்பு எண்ணிக்கை சுமார் 130 ஆக இருந்தது. ஆனால், அதிகாரிகள் பின்னர், உயிர் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது என அறிவித்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணை நடத்தப்படும் வரை இந்தோனேசியாவின் டாப் லீக்கில் அனைத்து போட்டிகளையும் நிறுத்த வேண்டும் என்று அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.