இங்கிலாந்து ராணியாகவும் காமனெவெல்த் நாடுகளின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மறைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார். 


இந்த நிலையில், ராணி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. இறுதிச் சடங்குக்கான ஆயத்தம் எல்லாம் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முதல் பெண்மணி ஜில் பிடனுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அழைப்பை முறையாக ஏற்றுக்கொண்டுள்ளார். துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும், நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார். 


என்னென்ன நகைகள்: 


இந்நிலையில் ராணி எலிசபெத்தின் உடலுடன் அடக்கம் செய்யப்படவுள்ள நகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணி எலிசபெத் தன் வாழ்நாளில் ஆடை அலங்காரங்களுக்காக பெயர் பெற்றவராகவே இருந்தார். அவர் தலையில் அணியும் டியாரா தொடங்கி ஆடையில் அணிந்து கொள்ளும் ப்ரூச் வரை எல்லாமே பெரும் கவனம் பெற்றுவந்தன. இருப்பினும் அவர் அடக்கம் செய்யப்படும்போது அவருடன் இரண்டே இரண்டு நகைகள் மட்டுமே சேர்த்து அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி தனது திருமண மோதிரத்தை அணிந்திருப்பார். அத்துடன் காதுகளில் முத்து பதித்த தோடு அணிந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் ராணி எலிசபெத்தின் சகோதரி ராணி விக்டோரியா அடக்கம் செய்யப்படும்போது பெருமளவில் நகைகள் அவர் உடலில் அணிவக்கப்பட்டிருந்தது என்று வரலாறு கூறுகின்றது. அவருடைய ஒவ்வொரு விரலிலும் மோதிரம் அணிவிக்கப்பட்டிருந்தது. தவிர எங்கெல்லாம் நகை அணிவிக்க வாய்ப்பு இருந்ததோ அங்கெல்லாம் நகை அணிவிக்கப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.




ஆச்சர்யப்படவைக்கும் குணாதியசங்கள்:


உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருந்தவர் தான் இரண்டாம் எலிசபெத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு இரண்டாம் எலிசபெத் ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபெத் ராணி. அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார். உண்மையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்தவர் எலிசபெத் ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு உண்டு. அதனாலேயே அவரது மறைவை உலகமே கண்ணீருடன் எதிர்கொண்டுள்ளது.