ஆஃப்கானிஸ்தான் நாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் தலிபான் படைகள் ஆட்சியில் இருந்து வந்தனர். அவர்கள் அங்கு அல் கொய்தாவிற்கு பயிற்சி இடம் மற்றும் ஆதரவு அளித்து வந்தனர். இதற்கு பயனாக2001ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அகம்த் ஷா மசூத் என்ற தலிபான்களுக்கு எதிரான தலைவரை அல் கொய்தா கொலை செய்தது. இதைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையத்தில் அல் கொய்தா தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம் தான் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா நுழைய முக்கிய காரணமாக அமைந்தது. 


நுழைய அமெரிக்க சொன்ன காரணம்! 


2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா ராணுவம் நேரடியாக ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த தொடங்கியது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், “ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் இது. அங்கு இருக்கும் அல் கொய்தாவையும் அதற்கு பாதுகாப்பு அளித்து வரும் தலிபான் அரசை ஆகிய இரண்டையும் அடியொடு அழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அத்துடன் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதத்தை அழித்து சுதந்திரமான கட்டமைப்பை உருவாக்குவோம்” எனக் கூறினார். 




அமெரிக்கா தாக்குதலுக்கு தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். எனினும் அமெரிக்கா படைகளின் துணையுடன் ஆஃப்கான் ராணுவப்படைகள் சில முக்கியமான இடங்களை கைபற்ற தொடங்கியது. இதனால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். அங்கு இருந்த தலிபான் அரசை நீக்கிவிட்டு ஹமீத் கார்சை தலைமையில் ஒரு இடைக்கால அரசு ஆஃப்கானிஸ்தானில் பதவியேற்றது. 


ஆப்கானுக்கு அமெரிக்கா செய்த செலவு இதோ!


2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். 2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆஃப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பிற்கு அமெரிக்கா 38 பில்லியன் டாலர் நிதியுதவியை அளித்தது. அப்போது முதல் தற்போது வரை ஆஃப்கானிஸ்தான் மறு கட்டமைப்பு அமெரிக்கா கிட்டதட்ட 144 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. 




இப்படி கூறிக் கொண்டு இருந்த அமெரிக்காவின் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட 2011ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது தான் காரணம். அதற்கு பின்பு அதிபர் ஒபாமா அமெரிக்கா படைகளின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாக அறிவித்தார். அத்துடன் 2014ஆம் ஆண்டிற்குள் அனைத்து அமெரிக்க படைகளும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என்று கூறினார். 




அதிபர் ட்ரெம்ப் கூறியது என்ன?


2017ஆம் ஆண்டு மீண்டும் நங்ஹார் பகுதியை அமெரிக்கா தாக்கியது. மேலும் ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போர் தொடரும் என்று அதிபர் ட்ரெம்ப் கூறினார். இதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு போர் மூண்டது. 2019ஆம் ஆண்டு இறுதியில் தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. 2020ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்க படைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று ட்ரெம்ப் கூறினார். 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் ஆஃப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் நீக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு தான் தற்போது உலகம்  முழுவதும் ஆஃப்கானிஸ்தான் பக்கத்திற்கு திருப்பியுள்ளது. 




வெளியேற பைடன் கூறிய காரணம்!


மேலும் நேற்று ஜோ பைடன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஃப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த அல் கொய்தாவை அழிக்க சென்றோம். அதை சரியாக செய்தோம். ஒசாமா பின் லேடனையும் அழித்தோம். எங்களுடைய வேலை ஆஃப்கானிஸ்தானில் புதிய கட்டமைப்பை செய்வதில்லை. ஆகவே நாங்கள் தற்போது வெளியேறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க:ஆப்கான் வான்வெளியை சர்வதேச நாடுகள் பயன்படுத்த மறுத்தது ஏன்?