தலிபான் கட்டுப்பாட்டில் சென்றவுடனே இந்த நடவடிக்கையை சர்வதேச விமான நிறுவனங்கள் எடுத்துவிட்டன. ஞாயிறு அன்று யுனைடெட் ஏர்லைன், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்கள் ஆப்கன் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்துவிட்டன. கத்தார் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தாய்வான் சீனா ஏர்லைன்ஸ், ஏர்பிரான்ஸ் மற்றும் லுப்தான்ஸா ஆகிய நிறுவனங்களும் நேற்று ஆப்கன் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்துவிட்டன.


பாங்காக், டெல்லி, சிங்கப்பூர், மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர்பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பயண நேரம் ஒரு மணிநேரத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளது என லுப்தான்சா தெரிவித்திருக்கிறது.


சில நீண்ட தூர விமானங்கள் (டிரான்ஸிட்) காபூலில் இறங்கி செல்வதுண்டு. இதுபோன்ற விமானங்களை இயக்குவதற்கு மாற்று வழித்தடத்தை விமான நிறுவனங்கள் தேடி வருகின்றன. போதுமான கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் டிரான்ஸிட் இங்கு சாத்தியம் இல்லை என ஆப்கானிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையமே தெரிவித்திருக்கிறது.




ஆப்கன் வான் எல்லையில் 26,000 அடிக்கு கீழே செல்வதற்கு கடந்த ஜூலை மாதமே விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்திருந்தது. பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 25,000 அடிக்கு கீழே செல்லகூடாது என்பது விமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. தற்போது மொத்தமாக வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்தனர். அசாதரண சூழலில் பொதுமக்கள் பயணிக்கும் விமானங்களை பல அமைப்புகள் இதுமுன்பு சுட்டு வீழ்த்தி இருப்பதால் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


இந்தியாவின் நிலை


இந்தியாவில் இருந்து காபூலுக்கு ஏர் இந்தியா விமானம் மட்டுமே சென்று கொண்டிருந்து. தினசரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பயணிகளை மீட்பதற்காக மட்டுமே செல்கிறது. இதுதவிர இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு செல்லும் விமானங்களுக்கு பயண நேரம் அதிகரித்திருக்கிறது.


முன்னதாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வான்வெளி, ஆப்கானிஸ்தான் வான்வெளியை கடந்து ஐரோப்பாவுக்கு சென்றது. ஆனால் தற்போது பாகிஸ்தான் வான்வெளி அடுத்து ஈரான் வான்வெளியை கடந்து ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஐரோப்பா செல்வதற்கு 45 நிமிடம் முதல் 75 நிமிடம் வரை பயண நேரம் கூடுதலாகிறது என விமானங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.




நேற்று சிகாகோவில் இருந்து டெல்லி வந்த விமானம் ஆப்கன் வான்வெளியை பயன்படுத்தவில்லை. சான்பிரான்ஸ்கோ டெல்லி விமானமும் மாற்று பாதையில் சென்றது. எரிபொருளுக்காக சார்ஜாவில் இறங்கியதாகவும் தெரிகிறது. விஸ்தாராவும் ஆப்கன் வழித்தடத்தை பயன்படுத்தவில்லை என தெரிகிறது. லண்டனில் இருந்து வரும் விமானம் வேறு தடத்தை பயன்படுத்தும் என விஸ்தாரா அறிவித்திருக்கிறது.


பழைய வரலாறு


1983-ம் ஆண்டு கொரிய விமானம் ஒன்று ஜப்பான் கடலில் வீழ்த்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.  2014-ம் ஆண்டு மலேசிய விமானம் உக்ரைன் வான்வெளி பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 நபர்களும் பலியானார்கள். கடந்த ஆண்டு உக்ரைன் விமானம் ஈரான் வான் வெளிபகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில் 176 நபர்கள் பலியானர்கள். இதுபோன்ற சோக வரலாறு இருப்பதால் ஆப்கன் வான்வெளியை பயன்படுத்த சர்வதேச சமூகம் விரும்பவில்லை.


எங்கிருந்து எங்கோ செல்வதற்கே ஆப்கன் வான்வெளியே பயன்படுத்த முடியாத சூழல் என்றால் அங்கேயே வாழும் அப்பாவி மக்களின் நிலை?