ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வந்தது. அமெரிக்க படைகள் அந்த நாட்டில் இருந்து வெளியேறியதால், தலிபான்களின் ஆதிக்கம் அந்த நாட்டில் தீவிரமடைந்த நிலையில், தலிபான்கள் ஆஃப்கானிஸ்தான் முழுவதையும் நேற்று கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப்கனி அண்டை நாடான தஜிஹிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றிவிட்டதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அந்த நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர். தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் உலகையே உலுக்கி வருகிறது. பல்வேறு தரப்பினரும் ஆஃப்கானிஸ்தான் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஃப்கன் கொடுமைக்கு இந்தியாவில் திரைத்துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா, காஜல் அகர்வால், அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஃகானிஸ்தான் நிலை குறித்து அங்குள்ள பெண் ஒருவர் கவலை தெரிவிக்கும் வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா, நாம் அமைதியாய் அமர்ந்து இதனை வேடிக்கை பார்க்க போகிறோமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே வீடியோவை பகிர்ந்துள்ள ராஷ்மிகா, எதாவது செய்தாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டா பக்க ஸ்டோரியில் ஆஃப்கன் குறித்து கவலை தெரிவித்துள்ள நடிகை காஜல், இந்த நிலை மனதை உலுக்குகிறது. ஆஃப்கன் மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே விமானத்துக்குள் மக்கள் கூட்டம் நெருக்கமாக அமர்ந்திருக்கும் போட்டோவை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ள நடிகை அதிதி ராவ், இதயம் உடையும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆஃப்கன் சம்பவம் குறித்து பேசிய அந்நாட்டு பெண் இயக்குநர் சாஹ்ரா கரிமி உலக நாடுகளை கடுமையாக சாடியிருந்தார். இன்னும் ஏன் சர்வதேச அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து பெண் இயக்குநர் எழுதியு நீண்ட கடிதத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.