மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் பலவற்றிலும் ஆண் உயிரணுக்கள் ஆரோக்கியம் வெகுவாகக் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொண்ட இந்த ஆய்வில் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றி பல்வேறு புள்ளிவிவரங்களும் வெளியாகியுள்ளன.
ஹியூமன் ரீப்ரொடக்டீவ்ஸ் அப்டேட் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த 45 ஆண்டுகளில் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையிலும் அதன் ஆரோக்கியத்திலும் அதலபாதாள வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த 45 ஆண்டுகளில் 62 சதவீதம் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 53 நாடுகளில் 223 மெட்டா அனாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. 57 ஆயிரம் ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மலட்டுத்தன்மை இல்லாதவர்கள் தான். இருந்தும் அவர்களின் உயிரணுக்களின் அளவும், எண்ணிக்கையும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் பிரதான எழுத்தரான பேராசிரியர் ஹகாய் லேவைன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியாவும் இந்த ஆய்வில் இடம்பெற்றது. இந்திய ஆண்களும் இந்த ட்ரெண்டில் உள்ளனர். ஆய்வில் உட்படுத்தப்பட்ட ஆண்களின் சராசரி உயிரணுக்களின் அளவு ஒரு மில்லியில் 104 மில்லியன் என்றளவில் இருந்து 49 மில்லியன் என்றளவுக்கு குறைந்துள்ளது. இந்த சரிவு இனவிருத்திக்கு தகுதியான மக்களின் எண்ணிக்கையை குறையச் செய்யும் என்று தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் இனவிருத்தி சிக்கல் கூட ஏற்படலாம் எனக் கூறினார்.
இந்த ஆய்வில் இரண்டு விஷயங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று உயிரணுக்கள் அடர்த்தி, இரண்டாவது உயிரணுக்கள் எண்ணிக்கை. இவை இரண்டின் அடிப்படையிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்பெர்ம் கான்சண்ட்ரேஷன் என்பது ஒரு மில்லிலிட்டர் செமனில் எத்தனை உயிரணு இருக்கிறது என்பது. ஸ்பெர்ம் எண்ணிக்கை என்பது உறவுக்குப் பின்னர் எத்தனை உயிரணுக்கள் வெளியேற்றப்படுகிறது என்பது.
இதற்கு முன்னதாக 2017ல் லீவைன் மற்றும் அவரின் குழுவினர் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதில் 40 ஆண்டுகளில் ஸ்பெர்ம் கான்சண்ட்ரேஷன் பாதியாக குறைந்ததாக தெரிவித்திருந்தனர். இப்போதைய ஆய்வில் அது 62 சதவீதமாகக் குறைந்துள்ளது. 1973ல் இருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் ஸ்பெர்ம் கான்சண்ட்ரேஷன் 101.2 மில்லியனில் இருந்து 49 மில்லியன் பெர் மில்லிலிட்டராகவும், ஸ்பெர்ம் கவுன்ட் 51.6%ல் இருந்து 62.3 சதவீதமாகவும் சரிந்துள்ளது என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக 2000 த்துக்குப் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் இந்த சரிவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்.
சரி ஸ்பெர்ம் கவுண்ட், ஸ்பெர்ம் கான்சண்ட்ரேஷன் எல்லாம் இப்படிக் குறைவதற்கு அதிகரிக்கும் காற்றுமாசு, புகைபிடிக்கும் பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, போதை வஸ்து பயன்பாடு ஆகியன காரணமாகக் கருதப்படுகிறது. அதுதவிர வாழ்க்கை முறையும் இதற்குக் காரணம், உடற்பருமன், ஆரோக்கியமில்லாத உணவு பழக்கமும் காரணம் எனக் கூறப்படுகிறது.