அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழன் அன்று நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாள் கொண்டாடப்படும்.


வியாழனுக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையையும் விடுமுறையாக எடுத்து கொண்டு அமெரிக்கர்கள் நான்கு நாட்கள் விடுமுறை நாள்களை கொண்டாடுவர்.


இந்தாண்டின் நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாளுக்காக காத்து கொண்டிருந்த மிசிசிப்பி மாகாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் மரச்சாமான்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது.


அந்நிறுவனத்தின் 2,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவம்பர் 21ஆம் தேதி நள்ளிரவு நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் - அவர்களில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.


அப்போதுதான், யுனைடெட் பர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸிலிருந்து (UFI) இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் இனி வேலைக்குத் திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.


"இயக்குநர்கள் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், எதிர்பாராத வணிகச் சூழ்நிலைகள் காரணமாக, நிறுவனம் அதன் அனைத்து ஊழியர்களின் வேலைவாய்ப்பை நீக்குவதற்கான கடினமான முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் கூட்டாட்சி சட்ட விதிகளின்படி, குறிப்பிட்ட ஊழியர் தனது பணியை இழந்தாலும் அவரது முதலாளியின் நிதி ஆதாரத்தில் அளிக்கப்படும் மருத்துவ காப்பீட்டை ஊழியர் பயன்படுத்தலாம். ஆனால், இதையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


"உங்களின் பணிநீக்கம் நிரந்தரமானது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோப்ரா சட்டத்தின் கீழ் வரும் சலுகைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது" என ஊழியர்களுக்கு நிறுவனத்தில் சார்பில் இ மெயில் அனுப்பட்டுள்ளது.


இதற்கு மத்தியில், நிறுவனத்தின் ஓட்டுநர்கள் அவர்களின் டெலிவரியை முடித்தார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், உபகரணங்கள், சரக்கு மற்றும் விநியோக ஆவணங்களை உடனடியாகத் திருப்பித் தருமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. தங்களுக்கு சொந்தமான பொருள்களை திருப்பி தருமாறு நிறுவனம் சார்பில் ஊழியர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


ஏராளமான ஊழியர்கள், தாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அதிர்ச்சியையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர்.


இதுகுறித்து ஊழியர் ஒருவர் பேசுகையில், "கடுமையாக உழைத்த தொழிலாளர்களை இப்படி கண்மூடித்தனமாக நடத்துவது நியாயமில்லை. ஒரு குழந்தையைப் பெற்ற தாய், தனக்கு மருத்துவ காப்பீடு இருக்கிறதா இல்லையா என யோசிக்கவைப்பது நியாயமில்லை. கீமோவின் நடுவில் இருக்கும் புற்றுநோயாளியிடம் சிகிச்சைக்கு எப்படி பணம் கொடுப்பீர்கள் என கேட்பது சரியல்ல" என்றார்.