கடந்த வாரம், ராணுவ திரும்பபெறும் நடவடிக்கைக்கு முன்பாக, அருணாச்சல பிரதேசத்தில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


டிசம்பர் 9ஆம் தேதி நடந்த மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு பின்னர், அப்பகுதியிலிருந்து இர தரப்பு வீரர்களும் பின்வாங்கியிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


வெளியான தகவலின்படி, இந்திய - சீன எல்லைபகுதியை சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி கடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக் கல்வானில் நடந்த மோதலுக்கு பிறகு இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே நடைபெறும் முதல் மோதல் இதுவாகும்.


இந்நிலையில், இந்திய - சீன மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, அருணாச்சல பிரதேசம் தவாங்கில் மோதலையடுத்து இரு தரப்பும் உடனேயே அங்கிருந்து பின்வாங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது.


நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், "அமெரிக்கா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சர்ச்சைக்குரிய எல்லை பகுதி குறித்து விவாதிக்க ஏற்கனவே உள்ள இரு தரப்பு தொடர்பு வசதியை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இரு தரப்பினரும் உடனேயே மோதலில் இருந்து விடுபட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.


இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்திய சீன எல்லை பகுதியை சீன ராணுவ வீரர்கள தன்னிச்சையாக மாற்ற முயற்சித்தனர். அதற்கு, இந்தியா உறுதியான திடமான பதிலடியை அளித்தது" என்றார்.


அருணாச்சலத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்சே பகுதியில் சீன ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) அத்துமீறிச் சென்றதை இந்திய ராணுவ வீரர்கள் தைரியமாக தடுத்து நிறுத்தினர் என்றும் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.


"இந்திய ராணுவ வீரர் யாரும் கொல்லப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்பதையும் நான் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன். நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை நமது ராணுவம் பாதுகாக்கும் என்றும் நான் சபைக்கு உறுதியளிக்கிறேன். 


எந்த அத்துமீறலையும் சமாளிக்க எங்கள் ராணுவம் தயாராக உள்ளது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நாடாளுமன்றம் துணை நிற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.


கல்வானில் இரு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கிடையே கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த மோதல் சம்வபத்தை தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.