கடந்த பிப்ரவரி 14ம் தேதி, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீரென ஆய்வு மேற்கொண்டது. மூன்று நாட்களாக நடந்த வருமான வரித்துறை ஆய்வு பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது.


கேள்விகளை எழுப்பிய வருமான வரித்துறை ஆய்வு:


முக்கியமாக, கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


ஆய்வு முடிந்த பிறகு விளக்கம் அளித்த பிபிசி செய்தி நிறுவனம், எந்த வித பயமும் பாரபட்சமும் இன்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடுவோம் என கூறியிருந்தது.


பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து விளக்கம் அளித்த வருமான வரித்துறை, நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளால் வெளியிடப்பட்ட வருமானம் மற்றும் லாபம் இந்தியாவில் உள்ள செயல்பாடுகளின் அளவோடு பொருந்தவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தது.


பிபிசிக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் அரசு:


இந்த நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்திற்கு ஆதரவு அளித்துள்ள பிரிட்டன் அரசு முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.


பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அந்நாட்டு வெளிநாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக துறை ஜூனியர் அமைச்சர், "நடந்து வரும் விசாரணை தொடர்பாகவும் வருமான வரி துறையின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அரசாங்கம் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால், ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுவான ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகள் என்று வலியுறுத்த விரும்புகிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய ஜூனியர் அமைச்சர் டேவிட் ரட்லி, "இந்தியாவுடனான ஒரு பரந்த ஆழமான உறவு உள்ளது. எனவே, இங்கிலாந்து ஆக்கபூர்வமான முறையில் பரந்த அளவிலான பிரச்னைகளை விவாதிக்க முடிந்தது. நாங்கள் பிபிசிக்கு ஆதரவாக நிற்கிறோம். நாங்கள் பிபிசிக்கு நிதியளிக்கிறோம். பிபிசி முக்கியத்துவம் வாய்ந்தது. பிபிசிக்கு ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.


பிபிசி நிறுவனம் எங்களை (அரசாங்கத்தை) விமர்சிக்கிறது. பிபிசி செய்தி நிறுவனம் (எதிர்க்கட்சி) தொழிலாளர் கட்சியையும் விமர்சிக்கிறது. மேலும், அந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.


இந்தியாவில் உள்ள அரசாங்கம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நமது நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்" என்றார்.


எதிர்கட்சியினர் கண்டனம்:



பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம் வெளியிட்டதற்கு அரசியல் பழிவாங்கும் செயலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விமர்சனம் மேற்கொண்டுள்ளனர்.


ஆய்வு குறித்து வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. அதிகாரிகளிடம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம், இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்திற்கு முற்றிலமாக தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.