சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மாகாண அரசுகள் புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளது இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


சீனாவில் பிறப்பு விகிதம்:


உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கருதப்படும் சீனாவில் பிப்ரவரி 13ம் தேதி நிலவரப்படி 145 கோடிக்கும் அதிகமாக மக்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றனர். அதேசமயம், 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போகிற போக்கில் இன்னும் சில மாதங்களில் உலகிலேயே  அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என சொல்லப்படுகிறது. 


சீனாவில் நீண்டகாலமாக ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டுமென சட்டம் இருந்தது. இதனால் அந்நாட்டில் குழந்தைகள், இளைஞர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கி முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் 2015 ஆம் ஆண்டு ஒரு குழந்தை சட்டம் ரத்து செய்யப்பட்டு 3 குழந்தைகள் வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் அரசு திணறியது. 


விந்தணு தானம்:


மேலும் மாகாண அரசுகள் குழந்தை பிறப்பை அதிகரிக்க செய்ய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏன் திருமணமாகாதவர்கள் கூட குழந்தைப் பெற்றுக் கொள்ளாலாம் என சிச்சுவான் மாகாணம் அரசு அனுமதி வழங்கியது


இதனையடுத்து தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ள யுனான் விந்தணு வங்கி முதன் முறையாக பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்வதற்கு முன் வருமாறு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. வேண்டுகோளை ஏற்று இந்திய மதிப்பில் ரூபாய் 54 ஆயிரம் முதல் ரூபாய் 85 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 


சம்பளத்துடன் விடுப்பு:


இந்நிலையில், புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு வழங்கப்படும் என மாகாண அரசுகள் அறிவித்துள்ளது. இந்த திட்டம் இளம் தம்பதிகளை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீனாவின் தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங்,  "திருமண விடுமுறையை நீட்டிப்பது கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்கான பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்" என கருத்து தெரிவித்துள்ளார்.