Pak On Ind: பாகிஸ்தான் உலகின் பாதியை அழித்துவிடும் என்றும் அந்நாட்டின் ராணுவ தலைவர் அசிம் முனிர் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தலைவர் மிரட்டல்:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைவரான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர், இந்தியாவிற்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து தங்களது இருப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாதி உலகத்தையே அழித்துவிடுவோம் என்றும் பேசியுள்ளார். தொழிலதிபரும், கௌரவ தூதருமான அட்னான் ஆசாத் டம்பாவில் அளித்த விருந்தில் பங்கேற்று பேசிய முனிர், “நாங்கள் அணு ஆயுதம் கொண்ட நாடு, நாங்கள் வீழ்ந்தால் எங்களுடன் பாதி உலகத்தை சாய்ப்போம்” என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க மண்ணிலிருந்து முதன்முறையாக..
அமெரிக்க மண்ணில் இருந்தபடி, வேறொரு நாட்டின் பிரதிநிதி மூன்றாவது நாட்டிற்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது. ஆப்ரேஷன் சிந்தூரின் விளைவாக இந்தியா - பாகிஸ்தான் இடையே வெடித்த மோதலை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக அசிம் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது சிந்து நதி நீரை இந்தியா கட்டுப்படுத்துவது குறித்து பேசுகையில், “அந்த பகுதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம். அவர்கள் அதை செய்து முடித்ததும் ஏவுகணைகளை கொண்டு அணையை தகர்த்து எறிவோம். சிந்து நதி என்பது இந்தியாவின் குடும்ப சொத்து ஒன்றும் கிடையாது. எங்களிடம் ஏவுகணைகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை” என்றும் விருந்து நிகழ்ச்சியில் அசிம் முனிர் பேசியதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
”பாகிஸ்தான் ஒரு குப்பை லாரி”
இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒப்பிடுகையில், “ஃபெராரி போன்ற நெடுஞ்சாலையில் வரும் மெர்சிடஸ் காரை போன்று இந்தியா ஜொலிக்கிறது. ஆனால், நாங்கள் ஜல்லி நிரம்பிய சாலையில் வரும் குப்பை லாரி. லாரி காரின் மீது மோதினால் யாருக்கு நஷ்டம்? இந்தியா தன்னை ஒரு உலக தலைவராக காட்டிக்கொள்ள முயல்கிறது. ஆனால், அந்த நிலையில் இருந்து உண்மையில் இந்தியா வெகு தொலைவில் உள்ளது” என இந்தியாவிற்கு எதிராக அசிம் முனிர் தீவிரமாக பேசியுள்ளார்.
கொம்பு சீவி விடும் அமெரிக்கா?
இந்த பயணத்தின் போது, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானின் முன்னாள் தூதர்கள் மற்றும் தற்போதைய தூதர்களை சந்தித்து அசிம் முனிர் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவின் மூத்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளையும் சந்தித்தார். கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவும் - அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்த வரையில், அந்நாட்டு மண்ணில் இருந்தபடி பாகிஸ்தான் ஒருபோதும் இப்படி பேசியதில்லை. ஆனால், ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள விரிசலை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாகிஸ்தான் முற்பட்டு வருகிறது. அதேநேரம், ஆசிய கண்டத்தில் இந்தியாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த, பாகிஸ்தானை அமெரிக்க அரசே கொம்பு சீவி விடுகிறதா? என்ற சந்தேகம் எழ தொடங்கியுள்ளது.