ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது.  இதனால் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பினார். தற்போது ஆஃப்கான் தலிபானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.


இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. 




காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள்,  சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


முன்னதாக தலிபான் கட்டுப்பாட்டில் ஆஃப்கான் வந்துள்ளதால் பெண்களுக்கான உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தலிபான் குறித்து பேசிய ஆஃப்கன் பெண் இயக்குநர் சாஹ்ரா கரிமி,  20 வருடங்களாக எங்கள் இளம் தலைமுறை பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் காணாமல் போகும். மீண்டும் ஆஃப்கான் இருண்ட காலத்துக்கு செல்லும். தலிபான் கலைகளை தடை செய்வார்கள். அவர்கள் கொலை செய்ய வேண்டிய பட்டியலில் நானும் மற்ற இயக்குநர்களும் இருப்பார்கள். உரிமைகளை பறிப்பார்கள். இருளில் தள்ளுவார்கள். வீட்டுக்குள் அடைக்கப்படுவோம். குரல் நெறிக்கப்படும். எங்கள் பள்ளிகள் நாசம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.


‛ஏன் நுழைகிறோம்... ஏன் வெளியேறினோம்...’ 20 ஆண்டுகளில் அமெரிக்கா கூறிய காரணங்கள் இதோ!