ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது.  இதனால் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியானது. 


யார் இந்த பர்தர்?


இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபர் யார் என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக அப்துல் பர்தார் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த பர்தர்? எப்படி தலிபான்களின் சக்தி வட்டத்திற்குள் வந்தார்? 


1968ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானின் உருஸ்கான் பகுதியில் பிறந்தவர் அப்துல் பர்தர். 1980களில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஆஃப்கான் முஜாகிதீன் அமைப்பில் அப்துல் பர்தார் பணியாற்றினார். அத்துடன் அந்த சண்டையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினார். 1992ஆம் ஆண்டு ஆஃப்கான் முஜாகிதீன் அமைப்பு ஆஃப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய படைகளை முற்றிலும் வெளியேற்றியது. அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தானில் யார் ஆட்சி அமைப்பது என்ற பெரிய குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பல கட்சிகள் மற்றும் ஆஃப்கான் முஜாகிதீன் அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். 





இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹெஸ்பி குலாப்தீன் அமைப்பு காபூலை தனியாக கைப்பற்ற முயற்சி செய்தது. அப்போது உள்ளூர் போர் மூண்டது. இந்த சமயத்தில் முல்லா ஓமர் மற்றும் அப்துல் பர்தார் இருவரும் இணைந்து தலிபான்கள் என்ற அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பின் ஒரே நோக்கம் ஆஃப்கானிஸ்தானை ஷரியத் விதிகளை பின்பற்றும் இஸ்லாமிய நாடாக மாற்றுவது தான். தலிபான்கள் அமைப்பு படிப்படியாக ஆஃப்கானிஸ்தானின் நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இறுதியில் 1996ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சியை பிடித்தது. அப்போது இதற்கு மூளையாக செயல்பட்டவர் அப்துல் பர்தார். 


அதன்பின்னர் 2001ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆஃப்கானிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு அப்துல் பர்தார் மற்றும் முல்லா ஓமர் தலைமறைவாக இருந்தனர். 2010ஆம் ஆண்டு அப்துல் பர்தாரை பாகிஸ்தானில் வைத்து அந்நாட்டு புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் 8 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்தார். 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் கேட்டுக் கொண்டதன் பெயரில் அப்துல் பர்தாரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அப்துல் பர்தார் தலிபான்களின் அரசியல் தலைவர் என்பதால் அவர் அமெரிக்கா-தலிபான் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு ஆற்றுவார் என்பதால் அவரை விடுதலை செய்ய ட்ரெம்ப் வலியுறுத்தி இருந்தார். 




அதேபோல் 2020ஆம் ஆண்டு அப்துல் பர்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் தோஹாவில் அமெரிக்கா-தலிபான் அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்கா படைகள் வெளியேற்ற அறிவிப்பிற்கு பிறகு மீண்டும் அப்துல் பர்தாரின் ஆலோசனையில் தலிபான்கள் தற்போது ஆஃப்கானிஸ்தானை தங்களுடைய முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஆகவே அவர் தான் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் அடுத்த அதிபராக பதவியேற்பார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:‛ஏன் நுழைகிறோம்... ஏன் வெளியேறினோம்...’ 20 ஆண்டுகளில் அமெரிக்கா கூறிய காரணங்கள் இதோ!