பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நீர் தான் முக்கிய வாழ்வாதாரம். தண்ணீர் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது.


உயிரினங்களுக்கு முன் தோன்றிய நீர்


இந்தப் பூமியில் முதல் உயிரினம் தோன்றியபோது பூமியில் ஏற்கெனவே தண்ணீர் இருந்ததாக அறிவியல் தெரிவிக்கிறது. ஆனால் தண்ணீர் எவ்வாறு பூமியில் தோன்றியது என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.


இந்நிலையில், பூமியில் தண்ணீர் தோன்றியதன் ஆதாரம் குறித்த விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.


அதன்படி, சூரிய குடும்பத்துக்கு வெளியே அருகில் உள்ள சிறுகோள்கள் மூலம் பூமிக்கு தண்ணீர் வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தங்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளில் இருந்து தெரிவித்துள்ளனர்.


ஜப்பானியர்களின் ஆராய்ச்சி


கடந்த ஆறு ஆண்டுகளில் ஜப்பானியர்கள் மேற்கொண்ட விண்வெளிப் பயணத்தில், Ryugu எனும் சிறுகோளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் விஞ்ஞானிகள் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.


 






Phys.org எனும் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, உயிரினங்கள் தோன்றியதன் ஆரம்பப்புள்ளி, அண்டத்தின் தோற்றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும் வகையில்,  2020 ஆம் ஆண்டில் ஹயபுசா -2 எனும் மிஷன் மூலம் இந்த சிறுகோளில் இருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகளை விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


சிறுகோளின் குப்பைகளில் ஆராய்ச்சி


கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானியர்களால் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், 'டிராகன் அரண்மனை’ எனப் பொருள்படும் வைர வடிவ சிறுகோளான ரியுகு மீது தரையிறங்கியது.


பூமியில் இருந்து சுமார் 185 மில்லியன் மைல்கள் தொலைவில் ரியுகு அமைந்துள்ள நிலையில்,, 2020ஆம் ஆண்டு பூமிக்குத் திரும்பியது.


முன்னதாக, ஜப்பானிய விண்கலம் ரியுகுவில் தரையிறங்கியதும் அதன் மேற்பரப்பில் அதிர்வினை ஏற்படுத்தி அங்கிருந்து 5.4 கிராம் (0.2 அவுன்ஸ்) கூழாங்கற்கள் மற்றும் தூசிகளை சேகரித்து கொண்டு வந்துள்ளது.


இந்நிலையில், நேச்சர் ஆஸ்ட்ரோனமி எனும் பிரபல இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவ்வாறு முதன்முதலில் உருவாகின என்ற புதிருக்கு ரியுகு மாதிரிகள் பதில்களை வழங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண