அர்ஜெண்டினாவில் ரயில் நடைமேடையில் காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து ஓடும் ரயிலின் குறுக்கே விழுந்த வீடியோ வெளியாகி காண்போர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
அர்ஜெண்டினாவில் கோன்சலஸ் கேட்டனில் உள்ள இண்டிபெண்டண்ட் ரயில் நிலையத்தில் கேண்டெலா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலுக்கு காத்திருந்தார். தண்டவாளத்தில் ரயில் சென்றுக்கொண்டிருந்தப்போது திடீரென அந்தப் பெண் மயக்கநிலை அடைந்து தடுமாறி நடக்கத் துவங்கினார். உடனிருந்த பயணிகள் யாரும் கவனிப்பதற்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில் அந்தப் பெண் விழுந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரயிலை நிறுத்தினர்.
ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கி லேசான காயத்துடன் உயிர் தப்பிய அந்த பெண்ணை ரயில்வே காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின்பு தற்போது வீடு திரும்பியுள்ளார் கேண்டெலா. நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேட்டியளித்த கேண்டெலா, “எனக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுந்தேன். எனக்கு முன்னால் இருப்பவரை அழைத்து காப்பாற்ற சொல்ல முயற்சித்தேன். ஆனால் அதற்குள் எனக்கு நினைவு தப்பி விட்டது. நான் ரயிலில் மோதிய தருணம் கூட எனக்கு நினைவில் இல்லை. நடந்த எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இன்னும் முயற்சித்து வருகிறேன்.” என்று கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்த நேரத்தில் அவர் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்ததாகவும் பின்னர் படுத்துக்கொண்டதாகவும் சுற்றி இருந்தவர்கள் கூறினர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அளித்த பேட்டியில், “நாங்கள் ரயிலுக்காகக் காத்திருந்தோம். திடீரென்று அவர் தண்டவாளத்தில் விழுந்தார். நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு என்ன ஆனது என்று அனைவரும் பயந்து ரயில் நிற்கும் வரை காத்திருந்தோம். ஆனால் இந்த பெண் மறுபிறவி எடுத்துள்ளார். அவர் உயிர் தப்பியது மிகப்பெரிய அதிசயம் தான்.” என்று தெரிவித்துள்ளார். உடனடியாக பியூனோஸ் எர்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று உடனே கூறிவிட்டனர். கடந்த மார்ச் 29 ஆம்தேதி நடந்த விபத்தின் பதைபதைக்கும் காட்சிகளை அந்நாட்டு போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த விடியோ வைரலாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மாதம், குஜராத் மாநிலம் சூரத்தில் ஒருவர் நடைமேடைக்கும் ஓடும் ரயிலுக்கும் இடையில் தவறி விழுந்து காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த நபர் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட போது இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், டெல்லியில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்த ஒருவரை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் காப்பாற்றிய சம்பவமும் நிகழ்ந்தேறியது. சம்பவத்தின் வீடியோ கிளிப், அந்த நபர் தனது தொலைபேசியில் பேசியபடி பிளாட்பாரத்தில் நடந்து செல்வதைக் காட்டியது.