உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் மனதை பதைபதைக்க வைக்கின்றன. அந்த வரிசையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை கண்கலங்க வைத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனின் தலைநகரமான கீவ் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகையை கொண்ட கீவ் நகரில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ரஷ்யாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர், அப்பகுதியைவிட்டு வெளியேறும் முன் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கின்றனர்.
வீடியோவைக் காண:
அந்த வீடியோவில், பியானோ இசைக்கலைஞரான ஐரினா தனது வீட்டைவிட்டு வெளியேறும் முன் பியானோ வாசித்துவிட்டு வெளியேறி இருக்கிறார். குண்டு வீசப்பட்டதால், வீட்டின் பெரும் பகுதிகள் சேதமடைந்திருப்பதற்கு மத்தியில் தனது இசைக்கருவியை எடுத்து இசைக்கும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயானா ஐரினா கண் கலங்க பியானோ வாசிக்கும் வீடியோவை அவரது மகள் கரினா ரெக்கார்டு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடியோவைப் பார்த்திருக்கின்றனர். நிறைய பேர் வீடியோவை பகிர்ந்து, தாக்குதலை நிறுத்த வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
தாக்குதல் நடைபெற்று வரும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில், பாதிக்கப்பட்ட மக்கள் இசையை நாடி மனதை தேற்றி வருவது முதல் முறையல்ல. அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிபடுத்தி வரும் சாமானிய மக்கள், தாக்குதல் நடைபெற்ற இடங்களிலும் இசை கருவிகளை வாசித்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்