2020-ஆம் ஆண்டு வூஹானில் பரவியதைக் காட்டிலும் மோசமாக, சீனாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


ஊடகக் கட்டுப்பாடுகளுக்குப் பெயர்போன சீனாவில் என்னதான் நடக்கிறது? பார்க்கலாம்.


உலகத்திலேயே முதன்முதலில் சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வூஹான் மாகாணத்தில் தொற்று பரவ ஆரம்பித்தது. சர்வதேசப் போக்குவரத்து காரணமாக கொரோனா தொற்று பிற நாடுகளுக்கும் மளமளவெனப் பரவியது. இதனால் இதுவரை 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 


சீனா, உலக நாடுகளுக்கு முன்கூட்டியே தெளிவான எச்சரிக்கையை விடுக்காததால்தான் தொற்று எல்லோருக்கும் பரவியது என்று குற்றச்சாட்டும் எழுந்தது. எனினும் உள்ளூர் அளவிலேயே கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியது சீனா. இதனால் பெருவாரியான அளவில் தொற்று குறைந்தது. 


உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கில் இருந்த சூழலில், சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.


இந்நிலையில் பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா தொற்று குறைந்துள்ள சூழலில், கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




ஒமிக்ரான் பரவலா?


2 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தொற்று மளமளவென அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் சீனாவில் உள்ளூர் அளவில் 3,100 கொரோனா தொற்று நேற்று (ஞாயிற்றுக் கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.


திங்கட்கிழமை அன்று உள்ளூர் அளவில் புதிதாக இதுவரை 2,300 தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் சிலர், ஒமிக்ரான் வகைத் தொற்றால்தான், வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


அதிகபட்ச தொற்று


தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் ஊரடங்கில் உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதால், தற்போது 3,100 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதாக சீன தேசிய மருத்துவ ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சத் தொற்றாகும். 


தொடரும் முழு ஊரடங்குகள்


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கை விதித்துள்ளது. 1.7 கோடி மக்கள் வாழும் ஷென்சன் நகரில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. 


இன்று (திங்கள்) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஷென்சன் நகரில் பேருந்து, மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக சனிக்கிழமை அன்று ஜிலின் நகரில் பகுதி அளவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 7 லட்சம் மக்கள் வசிக்கும் யாஞ்சிம் எனப்படும் நகரத்தில் ஊரடங்கு அமலானது.


 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான சங்சூன் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இருந்து ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது. மேலும் சில நகரங்களில் மார்ச் 1ஆம் தேதியில் இருந்தே ஊரடங்கு அமலில் உள்ளது. 


பிற கட்டுப்பாடுகள்


கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தாண்டி, பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், மால்கள் மற்றும் பொது மக்கள் கூடும் பிற இடங்களில் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஷாங்காய் நகரில் பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், உணவகங்கள், மால்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன.


உடனடி ஆண்டிஜென் பரிசோதனை


தொடர்ந்து உயர்ந்து வரும் அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உடனடி ஆண்டிஜென் பரிசோதனையை முதன்முதலாகப் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்த முடியும். ஷென்சன் நகர் முழுவதும் இத்தகைய கொரோனா பரிசோதனைகள் இந்த வாரம் முழுவதும் 3 முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




பூஜ்ய கோவிட் கொள்கை 


முன்னதாக கடந்த மாதத்தில் ஊடகமொன்றுப் பேட்டியளித்த சீனா உயர் அதிகாரி, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பூஜ்ய கோவிட் கொள்கையைப் பின்பற்றி, கோவிட் 19 வைரஸைப் பெருமளவு கட்டுப்படுத்தி உள்ளதாக, கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் சீனா சிறந்த செயல்திறனுடன் இருந்தது என்றும் கொரோனா வைரஸ் எங்கு தோன்றினாலும் உள்ளூர் ஊரடங்குடன் தேசிய மற்றும் சர்வதேச பயணங்களைக் கடுமையான பூஜ்ஜிய கோவிட் கொள்கையுடன் கட்டுப்படுத்தினோம் என்றும் பெருமையுடன் தெரிவித்திருந்தார்.


எனினும் ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் தொற்று அதி வேகத்தில் பரவி வருகிறது. இதனால் சீன நாட்டின் வெற்றிகரமானதாகக் கருதப்பட்ட பூஜ்ய கோவிட் கொள்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. 


ஹாங்காங் சூழல்


சீனாவில் மற்ற எந்த மாகாணத்தைக் காட்டிலும் ஹாங்காங்கில் சூழல் மோசமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று புதிதாக 27,647 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டன. 87 மரணங்களும் பதிவாகி உள்ளன. 




வூஹானைக் காட்டிலும் மோசம்


2020 வூஹானில் கொரோனா தொற்று பரவியதைக் காட்டிலும் தற்போது ஒமிக்ரான் வகைத் தொற்று அதி வேகத்தில் பரவி வருவதாக ஹாங்காங்கைச் சேர்ந்த சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதனால் தொழில்நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஐபோன் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஷென்சான் நகரில் ஃபாக்ஸ்கான் தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் கடுமையாக அடிவாங்கும் என்று கூறப்படுகிறது. 


 ஒமிக்ரான் வைரஸால் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும், வழக்கமான கொரோனா தொற்றைக் காட்டிலும் குறைவாக பாதிப்பும், அறிகுறிகளுமே இருப்பதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.  


வெளிநாட்டவர் மூலமே தொற்று


வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே இந்தத் தொற்று ஏற்பட்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் குளிர் காலத்தில் தொற்று வேகம் அதிகரித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதால், சங்சூன், ஜிலின் மாகாண மேயர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உலகை பாதிக்குமா?


சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலால், 2020ஐப் போலவே உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எனினும் தற்போது அங்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று, புதிய மரபணுவாக மாற்றம் கொள்ளாதவரை அச்சம்கொள்ளத் தேவையில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.