சில சாலையோர கடைகளில் உணவு தயாரிப்பவர்கள் வித்தியாசமான வியக்க வைக்கும் திறன்களை வெளிப்படுத்தக் கண்டிருப்போம். பரோட்டாவை தூரத்தில் இருந்து சரியாக கல்லில் விழ வைப்பது, தோசையை தூக்கி வீசி மடிப்பது, காபி, டீ, ராகி மால்ட் போன்ற பானங்களை கைகளை தூக்கி ஆற்றுவது என பலருக்கும் இருக்கும் திறன்களை வெளிப்படுத்தி வியாபாரத்தை பிரபலப்படுத்துவார்கள். அதில் ஆச்சர்யமளிக்கும் சில விஷயங்கள் வீடியோவாக வெளியாகி வைரலாகும். இவற்றுக்கெல்லாம் மேல் அதிசயிக்க வைக்கும் ஒரு செயலை சாலையோர பீட்சா கடையில் பீட்சா செய்பவர் ஒருவர் செய்கிறார்.
வித்தியாசமாக பீட்சா பேஸ் செய்யும் நபர்
பீட்சா செய்வதற்கு டோ (dough) எனப்படும் மாவுப்பொருள் பீட்சா பேஸ் மிகவும் முக்கியமானது. ரெடிமேடாக கிடைத்தாலும், நாம் செய்வது போல சுவை வராது என்பது பீட்சா மாஸ்டர்கள் சொல்லும் செய்தி. அதனால் பெரும்பாலும் பீட்சா 'டோ'வை செஃப்களே செய்வது வழக்கம். சாதாரணமாக அதனை செய்வதற்கே ஒரு கடினமான செயல்முறை தேவைப்படும். பரோட்டா மாவை வீசுவது எப்படி ஒரு கலையோ அதே போல பீட்சா 'டோ'வை கைகளை மடக்கி காற்றில் மேலே குத்துவதுபோல செய்வது ஒரு தனிக்கலை.
பூமராங்காக மாறும் பீட்சா பேஸ்
ஆனால் அந்த வித்தியாசமான கலையையே ஒருவர் மிகவும் வித்தியாசமாக அதிசயிக்கும் விதத்தில் செய்கிறார். மாவை பீட்சா பேசாக செய்யும் அவர் இடையில் அதனை வேகமாக சுற்றி மேலே தூக்கி வீசுகிறார். அந்த மாவு வெகுதூரம் ஆகாயத்தில் பறந்து, கிட்டத்தட்ட அந்த பீல்டிங் உயரத்திற்கு சென்று, பூமராங் போல் திரும்பி அவர் கைகளுக்கே வருகிறது. சூழ்ந்திருக்கும் கூட்டம் இதனைக்கண்டு ஆரவாரம் செய்கிறது. அங்கிருப்பவர்கள் மட்டுமல்ல, ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த வைரலான வீடியோ இணையத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வைரலான வீடியோ
இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. மாவை ஒரு மெல்லிய, உருண்டையான ரொட்டியாக உருட்டிய பிறகு, தெரு உணவு விற்பனையாளர் அதை மேசையில் தட்டுகிறார். பின்னர் ஒரு ஃபிரிஸ்பீ கேம்போல காற்றில் உயரமாக வீசுகிறார். ஆச்சர்யமளிக்கும் வகையில் மீண்டும் அவர் கைகளுக்கே திரும்பி வரும் அதனை லாவகமாக பிடித்து மீண்டும் கைகளில் வைத்து சுற்றி பீட்சா பேஸ் தயாரிக்கிறார். நம்பமுடியாத இந்தக்காட்சியை ஆச்சர்யத்துடன் பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.