இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் அண்மையில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். நேபாளின் முஸ்டாங் மாவட்டத்தில் இந்த பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. முஸ்டாங் மாவட்டத்தில் உள்ளது டுச்சுக்கே எனப்படும் மலை. இதனை மக்கள் மனபதி மலை என்றும் அழைக்கின்றனர். மிகப்பெரும் மலைமுகடுகளில் ஒன்றான தௌலகிரிக்கு சற்று தொலைவில் இந்த மலை உள்ளது.இதில்தான் அண்மையில் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. 


‘பனிச் சரிவின் காரணமாக எழுந்த காற்றில் எங்கள் பள்ளத்தாக்கின் முன்பக்கம் இருந்த பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்து சென்றன’ என்கிறார்கள் அந்தப் பகுதி வாசிகள். மிகப்பெரும் ஓசையுடனும் காற்றுடனும் பனிச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மலை அடிவாரப் பள்ளத்தாக்கில் வசித்து வந்த பல மக்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து தப்பித்து ஒடினர். இதற்கிடையே பனிச்சரிவில் சிக்கி 11 பேர் காயமடைந்தனர். இதில் 7 மாணவர்களும் அடக்கம். அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்படாத சூழலால் அவர்கள் தற்போது அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு அடுத்தநாள் அதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வைரலானது. 






இதே பகுதியில் இந்த வருடத் தொடக்கத்தில் வேறு ஒரு பனிச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.