தாலிபான் அமைப்பினர் பெண்களுக்கான கல்வியை எதிர்க்கவில்லை எனக் கூறி வரும், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு தற்போது பெண் கல்வி என்பது இஸ்லாம் வலியுறுத்துவது எனவும், அது பெண்களின் சட்ட உரிமை எனவும் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கல்விக்கான தற்காலிக அமைச்சர் நூருல்லாஹ் முனீர் சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய கல்வித் திட்டங்களில் மாற்றம் செய்து, அதனை இஸ்லாமிய மத அடிப்படையில் மாற்றவுள்ளதாகக் கூறியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தாலிபான் அமைப்பினர் பள்ளிகளை மூடியதால் ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டில் இருக்க வைத்திருப்பதாக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பெண் பள்ளிகளை 7ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மூடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆட்சிக்கு வந்த போது, தாலிபான் தலைவர்கள் நாட்டில் பெண்கள் கல்வி கற்க பாதுகாப்பான சூழல் உருவாக்கி வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் கல்வியை சட்டம் மற்றும் மதம் வழங்கியுள்ள உரிமை என்று கூறியுள்ள தற்காலிக அமைச்சர் நூருல்லாஹ் முனீர் இஸ்லாமியக் கல்வித் திட்டம் குறித்து விளக்கமாக எதுவும் பகிரவில்லை. இவர் ஏற்கனவே இஸ்லாமிய, ஆப்கானிஸ்தான் பாரம்பரியத்தின் படி, பெண்களுக்குக் கல்வி கற்க பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
ஆசிரியர்களுக்கான ஊதியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுகுறித்து யூனிசெஃப் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் நூருல்லாஹ் முனீர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, யூனிசெஃப் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆசிரியர்களுக்கு நேரடியாக நிதியுதவி செய்யும் எனக் கூறியிருந்தது. தாலிபான் தரப்பில் யூனிசெஃப் அளிக்கும் நிதி கண்காணிப்புடன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு ஒன்றில் பேசிய தாலிபான்களின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முத்தகி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் போர் காரணமாக ஆண்கள், பெண்கள் இருவருக்குமான பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாகவும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் ஆண் குழந்தைகளையும், ஆண் ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமிர் கான் முத்தகி சில இடங்களில் 6ஆம் வகுப்பு வரை பெண்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகங்களில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அமிர் கான் முத்தகி, பெண்களின் கல்வி குறித்து விமர்சனம் செய்து வரும் சர்வதேச சமூகம், மேற்கு நாடுகளால் ஆப்கானிஸ்தானின் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர இயலாத நிலையைக் குறித்து அதிகம் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.