துருக்கி சென்ற இந்திய மீட்புக் குழுவினர் நெகிழ்ச்சி பொங்க அந்நாட்டு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு உலகையே ஈர்த்துள்ளது.


நடுங்கவைத்த நிலநடுக்கம்:


தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது . பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் முழு நகரங்களையும் தரைமட்டமாக்கிய நிலையில், சுமார் 45,000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இந்தியா உட்பட பல நாடுகளும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றனர். பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.






மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் இந்தியா அனுப்பியுள்ளது. நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கியில் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.


ஆபரேஷன் தோஸ்த்:


துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும் வண்ணம் இந்த அவசரகால நிவாரணக் குழு அனுப்பப் பட்டுள்ளதாகவும் இதற்கு ஆபரேஷன் தோஸ்த் என்று பெயர் வைத்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். துருக்கி சென்றுள்ள இந்திய மீட்பு படையில் மேஜர் பீனா திவாரி என்ற ஒரு பெண் மருத்துவ அதிகாரியும் இடம்பெற்றுள்ளார். 99 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழு துருக்கி சென்றுள்ளது.


இந்நிலையில், 47 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் துருக்கி சென்றுள்ளது. வெள்ளிக்கிழமை துருக்கி சென்ற அந்தக் குழுவின் ராம்போ, ஹனி ஆகிய இரண்டு மோப்ப நாய்களும் உள்ளன.


இந்தியாவுக்கு நன்றி:


இந்தியாவுக்கு துருக்கியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் இந்திய மக்களிடமிருந்து மேலும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் துருக்கிக்கு வந்துள்ளது.


அண்மையில் துருக்கிக்கு 7வது நிவாரண விமானம் இந்தியாவில் இருந்து சென்றபோது "ஒவ்வொரு கூடாரமும், ஒவ்வொரு போர்வையும், ஒவ்வொரு தூங்கும் வசதிகொண்ட கருவிகளும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன. பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு உதவிய இந்தியாவுக்கு மீண்டும் நன்றி" என்று துருக்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது