ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஊதியத்துடன் கூடிய விடுமுறை:


ஸ்பெயின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதன் மூலம், ஐரோப்பிய கண்டத்தில் முதல் நாடாக ஸ்பெயினில் மாதவிடாய்க்கு விடுமுறை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த சட்டத்தின்படி, மாதவிடாயால் அவதிப்படும் பணியாளர்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் விடுமறை எடுத்து கொள்ளலாம். விடுமுறை எடுத்து கொள்ளும் பெண்களுக்கான ஊதிய செலவை மாநில சமூக பாதுகாப்பு அமைப்பு ஏற்று கொள்ளும்.


ஆனால், குறிப்பிட்ட பணியாளர் மாதவிடாயால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர் அங்கீகரிக்க வேண்டும். மாதவிடாயால் அவதிப்படும் பெண்களுக்கு மருத்துவர் எத்தனை நாள்கள் வரை விடுமுறை அளிக்கலாம் என்பது குறித்து சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 


பெண்ணிய முன்னேற்றத்திற்கு வரலாற்று நாள்:


இதுகுறித்து ஸ்பெயின் சமத்துவத்துறை அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறுகையில், "பெண்ணிய முன்னேற்றத்திற்கு இது ஒரு வரலாற்று நாள்" என்றார்.


இது தொடர்பாக சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஸ்பெயினின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான UGT, இத்தகைய மாதவிடாய் விடுப்பு பணியிடத்தில் பெண்களை தனிமைப்படுத்தும் என்றும் பெண்களை தவிர்த்துவிட்டு ஆண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு ஆதரவாக சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளது.


சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள முக்கிய எதிர்கட்சியான பழமைவாத மக்கள் கட்சி, "இந்த சட்டம் பெண்களை இழிவுபடுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. அவர்களுக்கு தொழிலாளர் சந்தையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்"


ஸ்பானிஷ் பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல் அமைப்பு வெளியிட்ட ஆய்வின்படி, மாதவிடாய் ஏற்படும் பெண்களில் மூன்றில் ஒருவர் கடுமையான வலியால் பாதிக்கப்படுகின்றனர்.


சமீபத்தில், கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. மாணவிகளின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


முன்மாதிரியாக திகழும் கேரளா:


பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என பல்வேறு முன்னெடுப்புகளுக்கு கேரளா முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளாவில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.


கேரளாவில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது நினைவுகூரத் தக்கது.