தன்னுயிரை துச்சமென மதித்து இன்னுயிர் காத்த அமெரிக்க இளைஞரின் வீரச் செயல் இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


அண்மைக்காலமாகவே அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான செய்திகளில் மட்டுமே அதிகம் இடம்பெற்று வந்தது.பள்ளிக் கூடத்தில் நுழைந்து 19 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 21 பேரை ஒரு இளைஞன் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


அதே, அமெரிக்காவில் தான் தன்னுயிரை துச்சம் என மதித்து இன்னுயிரைக் காப்பாற்றிய இளைஞரும் இருக்கிறார். இவர்களைப் போல் சிலர் தான் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்திக் கொண்டே இருக்கின்றனர்.


நடந்தது என்ன?


அமெரிக்காவின் சிகாகோ நகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டோனி பெர்ரி. அவர் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த இரண்டு பேருக்கு இடையே மோதல் நடைபெற்றது. அவர்கள் திடீரென்று டிராக்கில் விழுந்தனர். அந்த டிராக்கில் எப்போதும் 600 வோல்ட் மின்சாரம் பாயும்.  மின்சாரம் இருவரையுமே தாக்கியது. அதில் ஒருவர் லேசான காயத்துடன் தப்பித்தார். ஆனால் இன்னொரு நபர் மின்சாரத்தின் பிடியில் சிக்கி அலறினார். அப்போது நடைமேடையில் நின்றிருந்த டோனி பெர்ரி எவ்வித யோசனையும் செய்யாமல் சட்டென குதித்து அவரை லாவகமாகக் காப்பாற்றினார். சுற்றி நின்றவர்கள் எல்லோரும் அவரைத் தொடாதீர்கள் உங்கள் மீதும் மின்சாரம் பாயும் என்று எச்சரித்தாலும் கேட்காமல் தன் கடமையை செய்தார்.




நான் ஹீரோ இல்லை:


இந்த நிலையில், டோனி பெர்ரிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஆனால் அவரோ அதைப் பற்றியெல்லாம் பெரிதாக நினைக்கவே இல்லை. இது குறித்து அவர் அளித்த பேட்டியிலும் அவருடைய நல்ல எண்ணம் வெளிப்படுகிறது. நல்ல சமாரியன் இவர்தான் என்று எண்ணத் தோன்றுகிறது அவரது பேச்சின் ஆழம்.


சிபிஎஸ் நியூஸ் சேனலுக்கு டோனி பெர்ரி அளித்த பேட்டியில், மின் ரயில் பாதையில் விழுந்த அந்த நபர் அலறி துடித்துக் கொண்டிருந்தார். உடனே நானும் டிராக்கில் குதித்தேன். நான் அவரை நேரடியாகத் தொடவில்லை. நான் அவருக்கு உதவாமல் நடந்து சென்றிருக்கலாம். ஆனால் என்னால் அப்படி கடந்து செல்ல இயலவில்லை. கடவுள் அதை நான் செய்ய வேண்டும் என நினைக்கமாட்டார் அல்லவா? அதனால் தான் உடனே செயலில் இறங்கினேன்.


ஒருவேளை நான் அந்த டிராக்கில் கிடந்திருந்தால் மற்றவர்கள் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பேனோ அதைத்தான் நான் அந்த நபருக்கு செய்தேன். இதைச் செய்ததால் நான் ஒன்றும் ஹீரோ இல்லை. என்னை நான் ஹீரோவாகவும் நினைக்கவில்லை என்றார்.


டோனி பெர்ரியின் மனித நேயத்தையும், உயர்ந்த பண்பையும் அறிந்த உள்ளூர் தொழிலதிபர் அவருக்கு அவுடி 6 ரக காரை பரிசாக அளித்தார்.