அமெரிக்காவில் பள்ளிக்கூட பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே உடல்நலக் குறைவால் மயங்கிவிட வாகனத்தில் இருந்த 7ம் வகுப்பு பயிலும் சிறுவன் துரிதமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி அத்தனை உயிர்களையும் காப்பாற்றியுள்ளான். அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
உயிரை காப்பாற்றிய சிறுவன்:
அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளது வாரன் கன்சாலிடட் பள்ளிக்கூடம். இந்தப் பள்ளிக்கூடத்தின் வேன் வழக்கம்போல் நேற்று முன்தினம் புதன் கிழமை பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளி நோக்கிப் புறப்பட்டுள்ளது. அப்போது ஓட்டுநர் திடீரென மயங்கினார். அப்போது வாகனத்தில் இருந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் டில்லன் ரீவ்ஸ் ஸ்டீரிங் வீலை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தான். பேருந்தை மெல்ல தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பன்னர்ட் சாலையில் நிறுத்தினான். அதற்கு முன்னர் பேருந்தில் இருக்கும் மாணவர்களை நோக்கி 911 ஐ தொடர்பு கொள்ளுங்கள் என்று கூச்சலிட்டான். மாணவர்களும் அவ்வாறே செய்ய போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிடுகின்றனர்.
பேருந்து ஓட்டுநர் மயங்கியபோது டில்லான் டிரைவர் இருக்கையிலிருந்து 5 இருக்கைகள் பின்னால் அமர்ந்திருந்தான். ஆனால் நிலைமையை புரிந்து கொண்டு துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த 68 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளான். பின்னர் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பேருந்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வேறு பேருந்து மூலம் அனுப்பிவைத்தனர்.
குவியும் பாராட்டு:
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ஒரு சிறுவனின் சாதுர்ய புத்தி பல உயிர்களைக் காப்பாற்றிஉள்ளது. அதை நினைத்து நான் பெருமைப்படாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது டில்லன் படித்த பள்ளி அவருக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒருவேளை ஓட்டுநர் ஏதும் போதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மயங்கிய ஓட்டுநர் காப்பாற்றிய சிறுவன்
அந்த வீடியோவில் வைலட் நிற சட்டி அணிந்திருக்கும் ஓட்டுநர் திடீரென அசவுகரியமாக உணர்வது தெரிகிறது. அவர் உடல் வியர்ப்பது போல் உணர்ந்தார் போலும். அதனால் அவர் தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி தன் முகத்திற்கு விசிறுகிறார். பின்னர் அவர் பேருந்தில் இருந்த வாக்கி டாக்கி மூலம் பள்ளியின் போக்குவரத்து மேலாண்மை பிரிவுக்கு தொடர்பு கொண்டு தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறுகிறார்.
மேலும் தான் எந்த நேரத்திலும் மயங்கலாம் எனக் கூறுகிறார். அதன் பின்னர் அவர் மயங்கி விழுகிறார். அப்போது வரும் சிறுவன் வண்டியின் ஸ்டீயரிங்கை பிடித்துக் கொண்டே எமர்ஜென்சி கியரை இயக்குகிறார். வண்டியை ஒருவழியாக நிறுத்துகிறார். ஒரு நிமிடம் 20 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ பதற்றத்தை ஏற்படுத்தினாலும் கூட சிறுவனின் துணிச்சலால் கொண்டாடப்படுகிறது.
மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் கூட தனது நிலையை இழக்காமல் மிகவும் சாதுர்யமாக நேர்த்தியாக செயல்பட்ட அந்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவின் கீழ் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் வாழ்க்கை கூட இது மாதிரிதான் திடீரென ஆபத்தாகும் நாம் நிதானமாக இயங்கினால் சேஃப் லேண்டிங் என்று கிண்டலுடன் தத்துவத்தை உதிர்த்துள்ளனர்.