யூனிஸ் புயலின் பலத்த காற்று இங்கிலாந்தை புரட்டி எடுத்துக் கொண்டிருந்த அதே சமயம் , உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சமூக ஊடகக் கணக்குகளை உபயோகிப்பவர்கள் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க போராடிக் கொண்டிருந்த விமானங்களின் நேரடி வீடியோ லைவ்  ஸ்ட்ரீமை ஆர்வத்துடன் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.





பல்வேறு விமானங்களுக்கு நடுவே ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானம் ஒன்றும் தரையிரங்கப் போராடியது, ஆனால் அதன் முதல் முயற்சியிலேயே தரையிறங்க முடிந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பொதுவாக புயல்காற்றின்போது சில விமானங்கள் திசை திருப்பப்பட வேண்டும் அல்லது தரையிறங்குவதை நிறுத்திவிட்டு சுற்றி பறக்க வேண்டும். ஆனால் முதல் முயற்சியிலேயே விமானம் தரையிரங்கியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விமானம் தரையிறங்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.






விமான ஆர்வலர்களுக்காக பிக் ஜெட் டிவி சேனலின் நிறுவனர் ஜெர்ரி டயர்ஸ் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். வீடியோவில், டயர்ஸ், “அவர் இறங்கப் போகிறாரா என்று பார்க்கிறேன். காற்று வீசுகிறது..ஐ திங்க் ஹி காட் இட்” என பின்னணியில் குரல் கொடுக்கிறார். விமானம் ஓடுபாதையில் தரைதட்டியவுடன், "அந்த இந்திய விமானி மிகவும் திறமையானவர்" என்று கூறுகிறார்.


செய்தி அறிக்கைகளின்படி, மற்றொரு ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானமும் இதேபோன்ற காற்று வீசிய சூழலில் லாவாகமாகத் தனது முதல் முயற்சியில் தரையிறங்கியது.


ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் இந்தியா டுடே டெலிவிஷனிடம், “பிஏ (பிரிட்டிஷ் ஏர்வேஸ்) மற்றும் க்யூஆர் (கத்தார் ஏர்வேஸ்) விமானங்கள் தரையிரங்கத் தவறவிட்டுப் பறந்து சென்றன. ஆனால் நமது குழுவினர் நன்கு பயிற்சி பெற்றிருந்ததால் அவர்களால் சுமுகமாகத் தரையிரங்க முடிந்தது” எனக் கூறியுள்ளார்.