வாசிம் அக்ரம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான். பாகிஸ்தானின் கிரிக்கெட் நட்சத்திரமான இவர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பலரின் கனவு நாயகன். தேச எல்லைகள் கடந்து அவர் கொண்டாடப்பட்டார். அப்படியான அவர் தனது சுயசரிதை நூலை எழுதியுள்ளார். சுல்தான் ஏ மெமோயர் Sultan A Memoir என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் தான் எப்படி போதைப் பழக்கத்திற்கு அடிமையானேன் என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.


2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் முதன்முதலில் போதைக்கு அறிமுகமானதாகவும். 2009ல் தனது மனைவி ஹூமா இறந்த பின்னர் அந்தப் பழக்கத்தை கைவிட்டத்தாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


அந்தப் புத்தகத்தில் ஒரு வாக்கியத்தில், “நான் போதையில் திளைக்க ஆசைப்பட்டேன். அதற்காகவே பார்ட்டி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். புகழ்ச்சி என்பது தெற்காசிய நாடுகளை பொருத்தவரை அதனை அனுபவிக்கும் நபரை மயக்கி, இரையாக்கும் சக்தி வாய்ந்தது. அங்கே நீங்கள் ஓரிரவில் 10 பார்ட்டிகளுக்குச் செல்லலாம். நானும் அப்படிச் செய்தேன். அது எனது பாசிடிவிட்டி எல்லாம் நெகடிவ்வாக மாற்றியது” என்று எழுதியுள்ளார். அது மட்டுமில்லாமல், காலம் செல்லச் செல்ல கொக்கைன் மீதான எனது சார்பு கை மீறிச் சென்றது. இங்கிலாந்தில் தான் எனக்கு முதன் முதலில் இந்தப் பழக்கம் வந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பின்னர் அது இல்லாமல் இருக்க முடியாமல் அடிமைப்படுத்திவிட்டது என்றும் அவர் எழுதியுள்ளார்.


தற்போது 56 வயதாகும் வாசிம் அக்ரம் தற்போது தனது கவனத்தை பயணங்கள் பக்கம் திருப்பியுள்ளதாகக் கூறுகிறார். அதற்குக் காரணம் தனது மனைவி தான் என்றும் கூறியிருக்கிறார்.


அது குறித்து அவர், ஹூமா எனது போதைப் பழக்கத்தைக் கண்டுபிடித்தார். ஒரு நாள் அவர் எனது பர்ஸில் இருந்து போதை மருந்து பொட்டலத்தை எடுத்தார். அப்போது அவர் உங்களுக்கு எனது உதவி தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன் என்றார். நான் உடைந்துபோய் ஆமோதித்தேன். இது என் கைமீறிச் சென்றுவிட்டது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றேன். ஒரு சிறு கோடு நுகர்ந்தேன். அது இரண்டானது, மூன்றானது பின்னர் ஒரு கிராம் ஆனது. அது இன்னும் இரண்டு கிராம் கூட ஆகலாம். ஆனால் அது இல்லாமல் என்னால் உறங்க முடியவில்லை. உணவு உண்ண முடியவில்லை என்றேன். எனது சர்க்கரை நோயை கூட நான் சட்டை செய்யாமல் இருந்தேன். அதனால் எனக்கு தலைவலி மற்றும் மூட் ஸ்விங்ஸ் ஏற்பட்டன என்றும் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.


சிறிது காலம் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தேன். ஆனால் 2009 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் மீண்டும் என்னால் போதையை மறக்கமுடியாமல் போனது. அதன் பின்னர் ஹூமாவின் கண்காணிப்பில் போதை மருந்தை உட்கொண்டேன். ஆனால் 2009 அக்டோபரில் ஹூமா மோசமான நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அதன் பின்னர் நான் போதையை விட்டொழித்தேன். ஹூமாவின் தன்னலமற்ற சேவை என்னை போதையில் இருந்து மீட்டது. அந்த வாழ்க்கை முடிந்தது. அதைப் பற்றி நான் திரும்பிப் பார்ப்பதில்லை என்றார். அவரது இந்த ஒப்புதல் வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இது போதையில் இருந்து மீள நினைப்பவருக்கு உத்வேகமாகவும், போதைக்குள் நுழைய ஆசைப்படுபவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.