ரஷ்யாவில் ராணுவத்திற்கு எதிராக ஆயுதமேந்திய புரட்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் குழுவினர் உடனடியாக சரணடைய வேண்டும் என, அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.


உக்ரைன் - ரஷ்யா போர்:


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில்  தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை என குறிப்பிடப்படும் வாக்னர் அமைப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ரஷ்யாவிற்கு ஆதரவாக களம் கண்டனர். அந்நாட்டு அதிபர் புதினின் நீண்ட நாள் நிழல் உலக கூட்டாளியாக கருதப்படும், எக்னி பிரிகோசின் தான் அந்த தனியார் கூலிப்படையின் தலைவர் ஆவார். தற்போது அவர் தான், ரஷ்ய ராணுவ தலைமைக்கு எதிராக புரட்சியை தொடங்கியுள்ளார்.


வாக்னர் குழுவின் விவரம்:


எக்னி பிரிகோசின் தலைமயிலான கூலிப்படையான இந்த வாக்னர் குழுவானது கடந்த 2014ம் ஆண்டு தான், கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் தனது படகளை குவித்தது. அதைதொடர்ந்து, சிரியா உள்நாட்டுப் போர் உள்ளிட்ட மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளில், இந்த படை களமிறக்கப்பட்டது.


ரஷ்யாவுடன் வெடித்த மோதல்:


அந்த வகையில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரிலும், வாக்னர் குழுவின் துடுப்புகள் முக்கிய பங்காற்றின. அதேநேரம் ரஷ்யாவின் ராணுவ தலைமைக்கும், எக்னிக்கும் இடையேயான அதிகார மோதலில் அந்த அமைப்பின் உதவியை வேண்டாம் என புதின் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தனது துடுப்புகள் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்றதோடு, உக்ரைன் படையெடுப்பை நியாயப்படுத்த பல்வேறு பொய்களை கூறுவதாக ரஷ்ய ராணுவ தலைமை மீது எக்னி பிரிகோசின் குற்றம்சாட்டினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் பெரிதானது.


ஆயுதமேந்திய புரட்சிக்கு அழைப்பு:


இந்நிலையில் எக்னி டெலிகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஆயுதமேந்திய கலகத்திற்கு அழைப்பு விடுத்ததோடு, கிரெம்ளினின் உயர்மட்ட அதிகாரிகளின் "தீமையை" நிறுத்துவதாக அவர் சபதம் செய்தார். அதன்படி, ”நாட்டின் ராணுவ தலைமையை கவிழ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ராணுவ தலைமையை ஓரங்கட்டுவோம். நாங்கள் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம், இறுதிவரை செல்வோம். வழியில் குறுக்கிடும் எல்லாவற்றையும் எங்கள் படைகள் அழிக்கும். எங்கள் படைகளை ரஷிய ராணுவம் கொடிய ஏவுகணைத் தாக்குதல்களால் குறிவைத்தது. அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்” என எக்னி பேசியிருந்தார்.


ரஷ்யாவில் உள்நாட்டு போர்:


இதையடுத்து வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டுள்ளன. பல முக்கிய நகரங்கள் வழியே தலைநகர் மாஸ்கோவை நோக்கி, எக்னியின் படை முன்னேறிச் செல்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  இதனால் அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.


புதின் எச்சரிக்கை:


பரபரப்பான இந்த சூழலில்,  அதிபர் புதின் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ”துரோகிகளிடம் இருந்து நமது நாட்டை நாம் பாதுகாப்போம். வாக்னர் குழுவினர் சரணடைய வேண்டும். அவர்களுக்கு வலுவான பதிலடி தருவோம். அவர்களது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என புதின் எச்சரித்துள்ளார்.