டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை காண சென்று விபத்துக்குள்ளாகி 5 பேரின் உயிரை காவு வாங்கிய, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறியலாம்.
கவனம் ஈர்த்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்:
சுமார் நூறாண்டுகளுக்கு முன்பாக கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான, டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை காண்பதற்காக கடலுக்கு அடியில் சென்ற டைட்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது. எதிர்பாராதவிதமாக அந்த கப்பல் வெடித்து சிதறியதால், உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், அந்த நீர்மூழ்கி கப்பல் தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இங்கு அறியலாம்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்:
ஓசியன் கேட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீருக்கடியில் பயணிக்க பயன்படும் ஒரு வாகனம் தான் டைட்டன். 22 அடி நீளமுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலை சுமார் 17 போல்ட்டுகளை கொண்டு வெளிப்புறத்தில் இருந்து லாக் செய்வார்கள். சுமார் 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் இதனுள் கிடைக்கப்பெறும் . ப்ளே ஸ்டேஷன் ரிமோட் மூலம் இந்த நீர்மூழ்கி கப்பலை இயக்கலாம். உலகத்திலேயே தனியார் கம்பெனி வைத்துள்ள ஒரே நீர்மூழ்கிக்கப்பல் இந்த ஓஷன் கேட் நிறுவனத்திற்கு சொந்தமானது. 10,432 கிலோ எடை கொண்ட இந்த கப்பல் ஆறு சராசரி அளவிலான கார்களைப் போன்றது. டைட்டானிக் சிதிலங்கள் சுமார் 12,500 அடி கீழே உள்ள நிலையில், டைட்டன் 4,000 மீட்டர் அல்லது 13,123 அடி ஆழத்திற்கு கீழே செல்லும் திறன் கொண்டது. சுற்றுலா செல்லும்போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு, ஓஷன்கேட் நிறுவனம் பொறுப்பாகாது என பயணிகளிடம் எழுதி வாங்கிக் கொண்ட பின்னர் தான் இந்த பயணமே தொடங்கப்பட்டுள்ளது.
2 கோடி ரூபாய் கட்டணம்:
எளிதில் கிடைத்திடாத இந்த பெரும் அனுபவத்தை பெறுவதற்கான டிக்கெட் கட்டணம் 2 கோடி ரூபாய் ஆகும். பெரும் பணக்காரரகளுக்கு இது ஒரு பொருட்டாகாது என்பதை உணர்த்தும் விதமாக தான், கப்பலை வடிவமைத்த ஓசியன் கேட் நிறுவனத்தலைவரான ஸ்டாக்டோன் ரஷ், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து தொழிலதிபரான ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஏற்கனவே ஆறு முறை ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் மிச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானி பால்-ஹென்றி நர்கோலெட் மற்றும் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான ஹமிஷ் ஹார்டிங் ஆகிய ஐந்து பேர் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.
பயண விவரம்:
மொத்தம் 10 மணி நேரம் நீடிக்கும் இந்த பயணத்தில், டைட்டன் கப்பலில் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் மட்டுமே கடலுக்கு அடியில் பயணிக்க முடியும். மேற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடும் கப்பலில் இருந்து இறக்கி விடப்பட்ட பிறகு அந்த நீர்மூழ்கி கப்பலானது கடலுக்கு அடியில் பயணிக்கும். அதில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை காண வாய்ப்பு கிடைக்கும்.
விபத்து நிகழ்ந்தது எப்போது?
கடலுக்கு அடியில் பயணம் மேற்கொண்ட டைட்டன் கப்பலுடனான தொடர்பு, ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்கு பிறகு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அந்த கப்பல், கடலுக்கு அடியில் 13 ஆயிரம் அடியை எட்டியதாக கூறப்படுகிறது. அதேநேரம், விபத்துக்கான சரியான நேரம் என்ன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முந்தைய கடற்பயணம்:
2012 ம் ஆண்டு டைட்டானிக் பட இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் பசிபிக் கடலில் அமைந்துள்ள உலகின் மிக ஆழமான பகுதியான (மரியானா டிரெஞ்ச் ) சுமார் 11 கிலோமீட்டரை செங்குத்தான நீர்மூழ்கி கப்பலில் சென்றடைந்தார். முன்னதாக 1962 ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த டான் வால்ஷ் என்பவர் இந்த ஆழத்தை நீர் மூழ்கிக் கப்பல் மூலம் அடைந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 4 கிலோ மீட்டர் தூரத்தை எட்ட முடியாமல், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்திற்குள்ளாகியுள்ளது.