ரஷ்யாவின் தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் குழுமத்தின் கூலிப்படையினர் தற்போது ரஷ்ய அரசின் கட்டளைகளுக்கு ஏற்ப உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியைக் கொலை செய்ய பணியாற்றி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்னர் குழுமம் சமீபத்தில் மனித உரிமை மீறல்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்தக் குழு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய அரசுக்காக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்பட்டது. தற்போது உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் லிபியா, சிரியா, மொசாம்பிக், மாலி, சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் இந்தக் குழு பணியாற்றி வருகிறது. 


கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2018ஆம் ஆண்டு வரை, வாக்னர் குழுமம் ரஷ்ய ராணுவத்துடனும், சிரியாவில் பஷார் அல் அசாத் அரசுப் படைகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளது. ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் படைவீரரான டிமிட்ரி உட்கின் என்பவர் இந்தக் குழுவைத் தோற்றுவித்தவர் எனக் கூறப்படுகிறது. 


2014ஆம் ஆண்டு க்ரிமீயா நாட்டில் உக்ரேனின் பாசிஸ்டுகளை அழிப்பதற்காக இந்தக் குழு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பலரும் டிமிட்ரி உட்கினும், அவரது படையினரும் புதிய நாஜிக்கள் எனக் கூறப்படுகிறது.


கடந்த வாரம், உக்ரைன் நாட்டில் உள்ள நாஜிக்களை அழிக்கப் போவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது ராணுவப் படையெடுப்பை மேற்கொண்டது. 



யார் இந்த வாக்னர் குழு?


2014ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட வாக்னர் குழுமம் தனியார் ராணுவ நிறுவனமாகும். இது ரஷ்ய அரசால் பல்வேறு போர் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ரஷ்ய அரசுத் தரப்பு இதனை மறுத்துள்ளது. 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்தக் குழுமத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் பேர் கூலிப்படையினராகப் பணியாற்றுகின்றனர். 


2020ஆம் ஆண்டு, அமெரிக்க ஆய்வு நிறுவனமான CSIS வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பனிப்போர் முடிவடைந்த பிறகு, உலகம் முழுவதும் அரசுகளும், பிற ஆதிக்க சக்திகளும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களையும், தனியார் ராணுவ நிறுவனங்களையும் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூலிப்படையினர் குறைந்த செலவில் பணியாற்றுவதும், சிறிய எண்ணிக்கையிலான இந்த வீரர்கள் எளிதில் தங்களுக்கு கட்டளையிடப்படும் ஆணைகளை நிறைவேற்றுவதாகவும் கூறப்படுகிறது. 



அமெரிக்க அரசுத் தரப்பிலும் பிளாக் வாட்டர் என்ற தனியார் ராணுவ நிறுவனம் இதுபோன்று பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு, அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட பிளாக் வாட்டர் படையினர் ஈராக் போரில் சுமார் 17 பொதுமக்களைக் கொலை செய்தது. 


வாக்னர் குழுமம் மீதும் மனித உரிமை மீறல் வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஆப்பிரிக்கக் குடியரசில் வாக்னர் குழுமம் நிகழ்த்திய மீறல்கள் காரணமாக அவர்கள் மீது தடை விதித்துள்ளது. துன்புறுத்துதல், சட்டவிரோத கொலை, நடமாட இயலாதவாறு தாக்குதல் முதலான குற்றங்கள் வாக்னர் குழுமம் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.