உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், இரு நாட்டுத் தலைவர்களையும் ஒப்பிட்டு பலரும் பதிவிட்டு வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இருவரையும் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ் வைரலாகியுள்ளது.



கடந்த பிப்ரவரி 27 அன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிட் புடின் வெளியிட்ட புகைப்படத்தில் தனது பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மும்முரமாகவும், தீவிரமாகவும் உரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். மற்றொரு தரப்பான உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கியின் சமூக வலைத்தளங்களில் அந்நாட்டின் கியவ் நகரத்தின் வீதிகளில் இருந்து அவர் பதிவிட்டிருந்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னரே இரு நாட்டுத் தலைவர்கள் குறித்த ஒப்பீடுகளை இணையத்தில் பல நெட்டிசன்கள் பதிவிட்டு வந்துள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவரும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்து வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பவர்கள் என்பதாலும் இந்த ஒப்பீடு செய்யப்பட்டு வந்துள்ளது. ரஷ்யா தொடுத்துள்ள போரில் ரஷ்யப் படையினர் முன்னேறி வந்தாலும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி உலகம் முழுவதும் மக்கள் தொடர்பிலும் விளம்பரத்திலும் முன்னேறி வருகிறார்.



புடின் - செலென்ஸ்கி சந்திப்பு (2019)



வழக்கறிஞராகவும், காமெடி நடிகராகவும் இருந்த செலென்ஸ்கி உக்ரைன் நாட்டின் மிக பிரபலமான தொலைக்காட்சி தொடரில் அந்நாட்டின் அதிபராக நடித்திருந்தார். தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு உலகப் போர்களையும் தூண்டிய தேசியவாத சிந்தனைகளை வளர்க்காமல், நவீன ஐரோப்பாவை ஏற்றுக் கொள்வது செலென்ஸ்கியின் அரசியலாகத் தெரிகிறது.





ரஷ்ய அதிபர் புடின் 1990களின் சோவியத் வீழ்ச்சி கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய புவி அரசியல் துயரம் என வர்ணித்துள்ளார். ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை ஏஜெண்டான புடின், ரஷ்யாவுக்கு எதிராக ஏதேனும் நாடு போர் தொடுக்க நினைத்தால் வரலாற்றில் இதுவரை யாரும் பார்க்காத விளைவுகளைப் பெறுவார்கள் எனக் கூறியிருப்பவர்.




இந்நிலையில் சமீபத்தில் உக்ரைன் நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில், `இரண்டு தலைவர்கள்.. இரண்டு உலகங்கள்.. விடுதலை வெல்லட்டும்!’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஒப்பீட்டில் இருவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவ பலம், சமாதானப் பேச்சுவார்த்தைக் குழு, தற்போது இருக்கும் இடம் முதலானவை ஒப்பிடப்பட்டு, இருவருள் செலென்ஸ்கி பலமானவர் எனக் கூறப்பட்டுள்ளது.