ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விமான விபத்து:


உள்நாட்டு கிளர்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில், பிரிகோசின் பெலாரஸில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தவிமானம், எதிர்பாராத விதமாக டிவெர் மாகாணத்தில் குசென்கினோ கிராமத்திற்கு அருகே கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த  விபத்தில் 10 பேர் பலியானார்கள் என்றும், அதில் வாக்னர் குழுவின் தலைவர் எக்னி பிரிகோசினும் ஒருவர் என ரஷ்ய நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமான பயணிகள் பட்டியலில் பிரிகோசின் பெயர் உள்ளதாகவும், அதேநேரம் உயிரிழந்தவர்களில் அவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


குவியும் கண்டனங்கள்:


பிரிகோசினின் மரணம் தொடர்பான செய்திகளுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி “ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் பிரிகோசின் இறந்திருக்கலாம் என்ற செய்தியை கேட்டு நான் ஆச்சரியப்படவில்லை” என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். ”கிரெம்லினிற்கு விசுவாசமாக இல்லாத யாருக்கும் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு சான்று தான் பிரிகோசின் மரண செய்தி” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். இதேபோன்று போலந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யா தான் திட்டமிட்டு பிரிகோசினை கொன்று விட்டதாக கண்டனங்களை பதிவு செய்துள்ளன.


யார் இந்த பிரிகோசின்?


உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் பிரிகோசின் தலைமையிலான வாக்னர் குழு எனப்படும் தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை  துருப்புகள் முக்கிய பங்காற்றின. ஆனால்,  ரஷ்யாவின் ராணுவ தலைமைக்கும், வாக்னர் குழுவின் தலைவர் எக்னி பிரிகோசினுக்கும் இடையேயான அதிகார மோதல் காரணமாக,  அந்த அமைப்பின் உதவியை வேண்டாம் என புதின் திடீரென முடிவு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது துடுப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்றதோடு, உக்ரைன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த பல்வேறு பொய்களை கூறுவதாக ரஷ்ய ராணுவ தலைமை மீது எக்னி பிரிகோசின் கடந்த ஜுன் மாதம் குற்றம்சாட்டினார். 


கையெழுத்தான ஒப்பந்தம்:


இதையடுத்து ஆயுதமேந்திய வாக்னர் கூலிப்படையினர் ரஷ்யாவின் முக்கிய நகரங்களை நோக்கி புறப்பட்டன.  இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதை அடுத்து,  மாஸ்கோவின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். கிளர்ச்சியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதின் வலியுறுத்தினார். இதனிடையே, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மேற்கொண்ட பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட, பிரிகோசின் தனது படையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும், பிரிகோசின் பெலாரஸில் தஞ்சம் அடைவார் என்றும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிகோசின் எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தான் விமான விபத்தில் பிரிகோசின் உயிரிழந்துவிட்டதாக, ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.