கடந்த மாதம், உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இணைத்து கொண்ட நிலையில், தற்போது அந்த 4 பகுதிகளில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.


ரஷியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் உக்ரைன் பகுதிகளில் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் புதின் அறிவுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து புதின் கூறுகையில், "ரஷியாவிற்கும் நமது மக்களுக்கும் நம்பகமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக மிகவும் சிக்கலான, பெரிய அளவிலான பணிகளைத் தீர்ப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றார். செப்டம்பர் மாதம் தொடங்கி ரஷியா பெரும் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், புதினின் இந்த அறிவிப்பு மேலும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.






இந்த நடவடிக்கையை விளக்கிய புதின், தன்னுடைய நடவடிக்கைகளால் பொருளாதாரம், தொழில் மற்றும் உற்பத்தியின் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக, உக்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்த தேவையில்லை என்றும், உக்ரனை அழிக்க ரஷியா நினைக்கவில்லை என்றும் புதின் தெரிவித்திருந்தார்.


உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதினின் தொனி மென்மையாகி இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, சமீக காலமாக, போரில் ரஷியா மிக பெரும் பின்னடைவை சந்தித்து வரும் சமயத்தில், இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை பொழிந்தது. இதில் சிக்கி அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, அதில், உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்துள்ளன.


கடந்த சனிக்கிழமை, ரஷியா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன.


இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே உக்ரைனில் உள்ள நகரங்களில் குண்டு மழை பொழியப்படுவதாக கருதப்படுகிறது.  


உக்ரைன் மீது குறைந்தபட்சம் 75 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பாக, தலைநகர் கீவ் மற்றும் தெற்கு மற்றும் மேற்க நகரங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் உக்ரைன் நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். போரின் ஆரம்ப வாரங்களில் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்ட பிறகு, தலைநகரின் மீதான மிகத் தீவிரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.