அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை பிடிக்க தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளியின் நாடகக் கட்டிடத்திற்கு அருகிலுள்ள கல்பிரேத் சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இரவு 10:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வர்ஜீனியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் முதல்வர் ஜிம் ரைன் கூறுகையில், "துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர் என்பதை தெரிவித்து மனவேதனை அடைகிறேன்.
மேலும், இருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்தவொரு முதல்வரும் ஒருபோதும் அனுப்ப விரும்பாத செய்தி இது. இந்த வன்முறை வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்திருப்பதால் நான் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளேன். திங்கள்கிழமை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவையான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வருவார்கள்" என்றார்.
இந்த கொடிய துப்பாக்கிச் சூடு தொடர்பாக கிறிஸ்டோபர் டார்னல் ஜோன்ஸைத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரும், அந்த பல்கலைக்கழகத்திலேயே படித்து வருகிறார். இவர், பல்கலைக்கழக கால்பந்து அணியில் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த சந்தேக நபர் கடைசியாக ஜாக்கெட், நீல நிற ஜீன்ஸ் மற்றும் சிவப்பு காலணிகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கருப்பு நிற எஸ்யூவி காரில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.