பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக இருப்பது மெடா நிறுவனம். சமீபத்தில், 13 சதவிகித தொழிலாளர்களை அதாவது 11,000 பேரை இந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. 18 ஆண்டு கால வரலாற்றில் இத்தனை பேர் பணியில் இருந்து தூக்கப்படுவது இதுவே முதல்முறை.


மெடா நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையில் இருந்து சிங்கப்பூர் தலைமையகமும் தப்பவில்லை. பணி நீக்கத்தால் சிங்கப்பூரில் உள்ள 1,000 ஊழியர்களில் 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள் பொறியாளர்கள் உட்பட தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.


2021 சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, அங்கு வேலைவாய்ப்பு அனுமதி சீட்டு பெற்ற 1 லட்சத்து 77 ஆயிரத்து 100 பேரில் கால் பகுதியினர் அல்லது சுமார் 45,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கப்படும் மிக உயர்ந்த தகுதி வாய்ந்த வெளிநாட்டவர்களாக கருதப்படுகிறார்கள்.


 






இந்த அனுமதி சீட்டை பெற மாதத்திற்கு குறைந்தபட்சம் 5,000 ($3,700) சிங்கப்பூர் டாலர்கள் சம்பாதிக்க வேண்டும். மெட்டாவின் பணிநீக்கங்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத் துறையில் நிகழும் பிற பணிநீக்கங்களாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மந்தமான நுகர்வு செலவினம், அதிக பட்ச வட்டி விகிதம், உச்ச தொட்ட பணவீக்கத்திற்கு மத்தியில் சிங்கப்பூரில் பிராந்திய தலைமையகம் வைத்திருக்கும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் சிங்கப்பூரில் உள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 


ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட கேமிங் மற்றும் இணையவழி பவர்ஹவுஸ் சீ லிமிடெட் நிறுவனம், ஷோபீ நிறுவனம் ஆகியவை ஆட்குறைப்பு நடவடிக்கையில் இரண்டு முறை ஈடுபட்டுள்ளது. மேலும், வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளையும் திரும்பபெற்றுள்ளது. 


கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 67,300 பணியாளர்களைக் கொண்டிருந்த சீ நிறுவனம், அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது. 


இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்தமாக 931 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சீ நிறுவனம் சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி, அதிகரித்து வரும் கடன் செலவு மற்றும் உலகப் பொருளாதாரம் மந்தநிலைக்கு மத்தியில், லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாட்டில் ஆட்சேர்ப்பை குறைத்துள்ளது. 


எவ்வளவு பேர், பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது குறித்த தகவல் வெளியிடவில்லை. ஆனால், சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் வேலை இழப்புகள் நூற்றுக்கணக்கானதாக இருக்கலாம் மதிப்பிடப்பட்டுள்ளது.