ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



எரிமலை வெடிப்பு :


ஜப்பானின் முக்கிய தெற்கு தீவான கியூஷுவில் உள்ள சகுராஜிமா எரிமலை ஞாயிற்றுக்கிழமை இரவு வெடித்து, சாம்பல் மற்றும் பாறைகளை கக்கியது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (ஜூலை  24 ) உள்ளூர் நேரப்படி இரவு 8 .05மணிக்கு நிகழ்ந்துள்ளது. எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 300 மீட்டர் தொலைவில் வானில் புகை மண்டலங்கள் சூழ்ந்திந்ததாகவும் ககோஷிமாவின் தெற்கு மாகாணத்தில் 2.5 கிமீ (1.5 மைல்) தொலைவில் பெரிய பாறைகளை வீசியது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.






வைரல் வீடியோ :


சகுராஜிமா எரிமலை வெடித்து சிதறிய சமயத்தில் அந்த பகுதியில் இருந்த சிலர் வீடியோவை எடுத்து பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ பள்ளத்தின் அருகே ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் பளிச்சிடுவதையும், மலையின் உச்சியில் இருந்து இரவு வானத்தில் உயரும் சாம்பல் புகையையும் காட்டுகிறது.அருகிலுள்ள நகரங்களில் சேதம் அல்லது காயங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. இந்த சம்பவம் குறித்து பேசிய துணை தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹிகோ இசோசாகி  "நாங்கள் மக்களின் உயிருக்கு முதலிடம் கொடுப்போம் மற்றும் நிலைமையை மதிப்பிடுவதற்கும், எந்த அவசரநிலைக்கும் பதிலளிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.






முன்னெச்சரிக்கை :


எரிமலையை எதிர்கொள்ளும் இரண்டு நகரங்களில் வசிப்பவர்கள் சுமார் 120 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், வெடிப்பு எச்சரிக்கையை அதிகபட்சமாக ஐந்தாக உயர்த்தியுள்ளதாகவும் ஏஜென்சி தெரிவித்துள்ளது.பள்ளத்தில் இருந்து 3 கிமீ (1.8 மைல்) உள்ள பகுதிகளில் எரிமலை பாறைகள் விழும் மற்றும் 2 கிமீ (1.2 மைல்) க்குள் எரிமலை, சாம்பல் மற்றும் சீரிங் வாயு ஓட்டம் சாத்தியம் என்று நிறுவனம் எச்சரித்தது.


சகுராஜிமா எரிமலை அடிக்கடி வெடிப்பது இயல்பான ஒரு விஷயம்தான். இது ஒரு தீவாக இருந்தது, ஆனால் 1914 இல் வெடித்ததைத் தொடர்ந்து தீபகற்பமாக மாறியது.