தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபயவை போர் குற்றத்திற்காக கைது செய்யக் கோரி சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞருக்கு புகார் அளித்துள்ளது. 


International Truth and Justice Project என்ற மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்கள், 63 பக்கத்திற்கு புகார் அளித்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு போரின்போது, இலங்கையின் பாதுகாப்புதுறை அமைச்சராக பதவி வகித்த கோட்டபய ஜெனீவா உடன்படிக்கையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் படி சிங்கப்பூரில் அவருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இலங்கையில் நடைபெற்ற போரின்போது, சர்வதேச மனித உரிமை சட்டத்தையும் சர்வதேச குற்றச் சட்டத்தையும் அவர் மீறியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து International Truth and Justice Project வெளியிட்ட அறிக்கையில், "கொலை, துன்புறுத்தல், மக்களை மனிதாபிமானமற்று நடத்துதல், பாலியல் வன்கொடுமை உள்பட பாலியல் வன்முறை செயல்கள், சுதந்திரத்தை பறித்தல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் காயப்படுத்துதல், பட்டினி போடுதல் என கோட்டபய மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து International Truth and Justice Project அமைப்பின் நிர்வாக இயக்குநர் யாஸ்மின் சூகா கூறுகையில், "பொருளாதார சரிவின் காரணமாக இலங்கை அரசு நிலைகுலைந்தது. உண்மையில், 30 அல்லது அதற்கு மேலும் பல ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வரும் தீவிர சர்வதேச குற்றங்களிலிருந்து அமைப்பு ரீதியான தண்டனை பெறுவதிலிருந்து அந்நாட்டு அரசு தப்பித்து வருவதே பொருளாதார சரிவுக்கு காரணம். ஊழல் மற்றும் பொருளாதாரத்தை தவறாக நிர்வாகம் செய்ததற்கு மட்டும் இன்றி பெரும் வன்குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.


கோட்டபயவை கைது செய்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 1989ஆம் ஆண்டு, கோட்டபய, ராணுவ தளபதியாக பதவி வகித்த போது, அவரின் பொறுப்பின் கீழ் இருந்த மாவட்டத்தில் 700 பேர் மாயமாகினர். 2009 போரில் கோட்டபயவின் பங்கு குறித்து புகாரில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், ராணுவ தளபதிகளுக்கு தொலைபேசி மூலம் கோட்டபய ராஜபக்ச குற்றங்களை செய்ய உத்தரவிட்டதற்கான ஆதாரங்கள் புகாரில் இணைக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, தலைமையகத்தில் இருந்து கொண்டு போரை ட்ரோன் மூலம் கிடைத்த  வீடியோக்களின் மூலம் ராஜபக்ச பார்த்ததற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கூடாரங்களில் உணவுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோதும், மருத்துவ சிகிச்சை பெற்று கொண்டிருந்த போதும் குழிக்குள் மக்கள் பதுங்கியிருப்பதை தெரிந்தே ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண