அமெரிக்க தேசிய ஃபுட்பால் போட்டிகளின் இறுதி ஆட்டம் சூப்பர் பவுல் எனப்படுகிறது. இந்த இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் நடைபெறுகிறது. அமெரிக்காவில் நாடு முழுவதும் இந்த சூப்பர் பவுல் தொடர்பான கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். பல்வேறு ஊர்களில் இதை அடிப்படையாக வைத்து சில நிகழ்வுகளை நடத்துவார்கள். இதற்கிடையே மனநலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்த அங்கே ஒரு நிறுவனம் போனி குதிரைகளைக் கொண்டு க்யூட்டான சூப்பர் பவுல் நிகழ்வை நிறைவேற்றியுள்ளது.



மேன் இன் ஹெவன் என்கிற பாரிங்டன் ஹில்லில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம், மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக மக்களை மினியேச்சர் தெரபி குதிரைகளுடன் இணைக்கிறது. இந்த சிறிய குதிரைகள் மருத்துவமனைகள், முதியோர் மையங்கள், இதர நர்சிங் வசதிகள், பள்ளிகள், மற்றும் மக்கள் அமைதியாகக் கூடும் இடங்கள், நூலகங்கள் ஆகிய இடங்களில் எந்தக் கட்டணமும் இன்றி இந்த சேவையை அந்த நிறுவனம் அளித்து வருகிறது. 


இந்த மேன் இன் ஹெவன் கடந்த வாரம் அதன் பாரிங்டன் ஹில் அலுவலகத்துக்கு வெளியே "மினி பவுல்" ஒன்றை நடத்தியது. ஞாயிற்றுக்கிழமை பிலடெல்பியா ஈகிள்ஸ் மற்றும் கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான சூப்பர் பவுல் ஆட்டத்தின் சமயத்தில் இது நிகழ்த்தப்பட்டது. இலாப நோக்கற்ற இந்த விளையாட்டில் அந்த நிறுவனத்தின் மினி குதிரைகள் ஒரு பெரிய பொம்மை கால்பந்தை தனது மூக்கால் தள்ளி விளையாடின. விளையாடிய குதிரைகள் அணிகளின் சீருடையை அணிந்திருந்தன. இதன் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது. இந்த விளையாட்டில் இசைக் கேளிக்கைகளும் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.