நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை துருக்கி- சிரியா எல்லைப்பகுதியான காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 என்ற ரிக்டர் அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உடனடியாக மீட்பு படையினர் களத்தில் இறங்கினர். நடப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு நாள்களில் மட்டும் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்த நிலையில், இந்த நிகழ்வால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் தோண்ட தோண்ட உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுவது அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நிலநடுக்கம் காலையில் ஏற்பட்டதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. அதேசமயம் நீண்ட நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படுபவர்களால் சிறிது நம்பிக்கையும் மீட்பு படையினருக்கு ஏற்பட்டுள்ளது.
மோப்ப நாய், ட்ரோன் கேமரா உள்ளிட்டவை உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறியும் பணி இரவு, பகலாக நடக்கிறது. மேலும் இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் இதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 50 லட்சம் பேர் வரை வீடுகளை இழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 34,179 ஆயிரம் பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் 29,605 பேரும், சிரியாவில் 4,574 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.