துருக்கியை ஒட்டிய அர்மேனியா நாடு 35 ஆண்டுகளுக்குப் பின்னர் துருக்கியுடனான எல்லையைத் திறந்துள்ளது. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்வதற்காக அந்த எல்லை திறக்கப்பட்டுள்ளது.


எல்லையில் வாயிலாக அர்மேனியாவில் இருந்து துருக்கிக்கு 5 டிரக்குகளில் உணவு, குடி தண்ணீர், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதனை அர்மேனியாவுக்கான துருக்கி சிறப்பு தூதர் செர்தார் கிளிக் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் கிளிக் தனது ட்வீட்டில் அர்மேனிய அதிபர் ரூபென் ரூபினியானுக்கு நன்றி சொல்லியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அதிபர் ரூபினியான், உதவி செய்ய இயன்றதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.


துருக்கிக்கும் அர்மேனியாவுக்கு இடையேயான எல்லை 1990களில் மூடப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின்னால் துருக்கியின் ஓட்டோமேன் பேரரசால் அர்மேனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது வரலாறு. இதனை இன அழிப்பு என்று அர்மேனியா கருதுகிறது. அதன் பின்னர் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவின் சிக்கல் நிலவிவந்த நிலையில் 1990களில் எல்லை மூடப்பட்டது. 2001 க்குப் பின்னர் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சிறப்பு தூதர்களை நியமித்தது. இந்நிலையில் நிலநடுக்கத்தினால் உடைந்த உறவு மீண்டும் துளிர்த்துள்ளது. 
 
25 ஆயிராத்தைக் கடந்த உயிர் பலி:


துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து நொருங்கின. தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போது, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 


துருக்கியில் நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 36 மணிநேரத்தில் மட்டும் துருக்கியில் 100 க்கு மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 


அதன்படி, கடந்த 36 மணிநேரத்தில் தென்கிழக்கு துருக்கியில் 4 ரிக்டர் என்ற அளவில் 81 நில அதிர்வுகளும், 5 என்ற ரிக்டர் அளவில் 20 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது. மேலும், 6 ரிக்டர் அளவில் மூன்றும், 7 ரிக்டர் அளவில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. 


இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:


கடந்த 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. அப்போது, டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர்.  அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக,  2011ம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600 க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர். 


கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தற்போது வரை 15 ஆயிரம் பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகலாம்.


இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்த்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.