சீனாவில் உள்ள சென்ஷோ நகரில் நாட்டின் மிக பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்த நகரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில், ஊரடங்கில் இருந்து தப்பிக்கும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் மெக்டோனல் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்ஷோவில் உள்ள ஃபாக்ஸ்கானில் பூஜ்ஜிய கொரோனா ஊரடங்கில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆப்பிளின் மிகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் வெளியே சென்ற பிறகும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட கோவிட் செயலியில் இருந்து தப்பிக்க 100 கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள சொந்த ஊர்களுக்கு அவர்கள் நடந்தே செல்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.
சீன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் மத்திய நகரமான சென்ஷோவில் உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமான ஆலையில் இருந்து தப்பிக்க மக்கள் வேலியைத் தாண்டுவதைக் காணலாம். கொரோனா பரவல் காரணமாக பல ஊழியர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என முன்னதாக செய்தி வெளியாகி இருந்தது.
தொழிற்சாலை குறித்து விரிவாக விவரித்துள்ள பிபிசி செய்தியாளர் ஸ்டீபன், "சென்ஷோ ஃபாக்ஸ்கானில் சுமார் 300,000 தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உலகின் பாதி ஐபோன்கள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு குழப்பம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், சீன சமூக வலைதளத்தில் வெளியான வீடியோக்களில், ஹெனான் மாகாணத்தில் இருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக வீடு திரும்புவதைக் காணலாம்.
சனிக்கிழமை முதலே, சீன சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் வயல்வெளிகளிலும் சாலைகளிலும் மலைகளை ஏறி வீடு திரும்பு வருவதை காட்டுகின்றன.
நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு உதவ இலவச விநியோக நிலையங்களை அமைத்திருப்பதையும் படங்களில் காணலாம். அரசாங்கம் மற்றும் ஃபாக்ஸ்கான் உதவி இல்லாமல், அந்நியர்களின் கருணையை மட்டுமே அவர்கள் நம்பி உள்ளனர்.
ஹெனான் மாகாணத்தின் தலைநகரான சென்ஷோவில் அக்டோபர் 29 வரையிலான ஏழு நாட்களில் உள்ளூர் பரவல் காரணமாக 167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஏழு நாட்களில் பதிவான தொற்றை காட்டிலும் அதிகம்.
கொரோனா - பூஜ்ஜிய- கொள்கையை பின்பற்றி வரும் சீனா தொடர்ந்து கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.