பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.



தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் ’நால்கே’ என்னும்  புயல் உருவாகி உள்ளதால் , அங்கு கடந்த ஒரு வாரமாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழையால் சூழந்த வெள்ளம் காரணமாக வீடுகளின் மேற்கூறை பல காற்றில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் சில வீடுகள் வெள்ள நீரில் சிக்கி இடிந்த நிலையில் காணப்படுகின்றனர். மழை , வெள்ளம் , காற்று, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் சிக்கி இதுவரையில் 98 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடக தலவல்கள் தெரிவிக்கின்றன.






 


நிலச்சரிவில் சிக்கி குதியாஸ் கிராமத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  மோரா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் வீடுகளை இழந்து , குடிநீர் , உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பலரை மீட்கும் நடவடிக்கைகளும் , காணமல் போனவர்களை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினாந்த் மார்கோஸ் ஹெலிகாப்டர் மூலமாக பாதிகப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளார்.


 






தினமும் பலர் படகில் பயணம் செய்யும் தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில் படகு சேவையை கடலோர காவல்படை நிறுத்தியுள்ளது. கடலோர காவல்படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். வெள்ளம் நிலச்சரிவு உள்ளிட்டவை பிலிப்பைன்ஸில் பொதுவான ஒன்றாக இருந்தாலும் , இதுவரையில் இல்லாத அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது.  பிலிப்பைன்ஸை பொதுவாக ஆண்டுக்கு 20 சூறாவளி அல்லது வெப்பமண்டல புயல்கள் தாக்குகின்றன. அவை பசிபிக் பெருங்கடலில் இருந்து உருவாகின்றன. தற்போது பிலிப்பைன்ஸி தாக்கும் நல்கே புயல் வலுவானது அல்ல  என்றபோதிலும்  இது மிகப் பெரியது மற்றும் ஈரப்பதமிக்கது. மேலும் நாட்டின் பெரும்பகுதியை சூழக்கூடியது என்கிறனர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் .