தாய்ப்பாசம் என்று வந்துவிட்டால் மனிதர்கள் விலங்குகள் என்று பேதம் ஏதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் காட்சிகளே இதற்கு சான்று.
கொரில்லாக்கள் மனிதர்கள் போன்ற சில பழக்கவழக்கங்கள் கொண்டவை. குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என்ற தியரியும் இங்கு இருக்கிறது தானே. அதனாலேயே குரங்கினத்தின் கொரில்லா, சிம்பான்சி, ஒராங்குட்டான் என அனைத்தும் அவ்வப்போது தங்களின் புத்திசாலித் தனத்தை வெளிப்படுத்தி பிரபலமாகிவிடும். அப்படியொரு சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.
நெற்றி முத்தமிட்டு...
கனடாவில் உள்ளது பிரபலமான கால்கேரி உயிரியல் பூங்கா. இங்குள்ள கொரில்லா குரங்கு ஒன்று சமீபத்தில் தான் குட்டியை ஈன்றது. அதனால் சதா சர்வ காலமும் குட்டியை கவ்விக் கொண்டே திரிகிறதாம் அந்த கொரில்லா குரங்கு. அப்படித்தான் சமீபத்தில் அந்தப் பூங்காவிற்கு குழந்தைகள் அதிகமாக வந்துள்ளனர். அப்போது அந்த கொரில்லா குரங்கு தனது குட்டியை கையில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு உச்சி முகர்ந்து பின்னர் அக்குட்டியை பார்வையாளர்களுக்கு உயர்த்திக் காட்டியுள்ளது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்த கொரில்லாவின் நடவடிக்கைகள் அத்தனையும் மனிதரை ஒத்திருப்பதாகக் கூறி நெகிழ்கின்றனர் நெட்டிசன்கள். அதேவேளையில் இன்னும் சிலர் எத்தனை அழகாக வாழ்கிறது அந்த கொரில்லா. அதை மனிதர்களுக்கு காட்சிப் பொருளாக்குவதற்காக உயிரியல் பூங்காக்களில் இப்படி அடைத்து வைப்பது எப்படி நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிம்பா மொமன்ட்:
இன்னும் சிலர் தி லயன் கிங் படத்தில் குட்டிச் சிங்கத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சியில் ரஃபிக்கி என்ற கொரில்லா குரங்கு சிம்பாவை தலைக்கு மேல் தூக்கி எல்லோருக்கும் அறிமுகப்படுத்தும் காட்சி போல் உள்ளது என்று சில நெட்டிசன்கள் நெகிழ்ந்துள்ளனர்.
சைக்கிள் ஓட்டிய கொரில்லா:
கடந்த மாதம் கொரில்லா ஒன்று சைக்கிள் ஓட்டும் காட்சி இணையத்தில் வைரலானது. ஒரு குட்டி கொரில்லா ஒன்று சைக்கிள் ஓட்டிக் கொண்டே சில விநாடிகள் செல்லும். ஆனால் நிலை தடுமாறி விழுந்துவிடும். அதனால் கோபமடைந்த அந்த கொரில்லா சைக்கிளை தூக்கி வீசிவிடும். ஸ்டுப்பிட் சைக்கிள் என்று தலைப்பிட்டு அந்த க்யூட் வீடியோவை இணையவாசி ஒருவர் பகிர அது வைரலானது.