அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இச்சூழலில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில், 217 வாக்குகளில் 213 வாக்குகள் கிடைத்ததையடுத்து, இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்போது, செனட் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், அங்கு தோல்வியடையவே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையிலும், குடியரசுக் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மட்டுமே ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து ஆயுதங்களை தடை செய்வதற்கு ஆதரித்துள்ளனர்.


100 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டில், ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 50 பேர் மட்டுமே உள்ளனர். செனட் சபையில் இந்த விவகாரம் குறித்து பரிசீலனைக்குக் எடுத்து கொள்வதற்கு குடியரசுக் கட்சியை சேர்ந்த 10 பேரின் வாக்குகள் தேவை. 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


ஆனால், இச்சட்டம், 2004 இல் காலாவதியாகவிட்டது. அதன் பின்னர் ஆயுதங்களின் விற்பனை அதிகரித்தது. பிரிதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி மசோதா குறித்து கூறுகையில், "எங்கள் நாட்டில் துப்பாக்கி வன்முறையின் கொடிய தொற்றுநோய்க்கு எதிரான நமது தற்போதைய போராட்டத்தில் ஒரு முக்கியமான படி" என்றார்.


பஃபேலோ, நியூயார்க், உவால்டே, டெக்சாஸ் மற்றும் இல்லினாய்ஸின் ஹைலேண்ட் பார்க் ஆகிய இடங்களில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்களின் விற்பனை, இறக்குமதி, உற்பத்தி அல்லது பரிமாற்றத்திற்கு இந்த மசோதா தடை விதித்துள்ளது. மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.


அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண