கடந்த சில நாட்களாக இலங்கைக்கு மிகவும் அதிர்ச்சி தரும் தகவல்களாகவே வரும் செய்திகள் அனைத்தும் இருக்கின்றன. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் மேலும் மேலும் பல்வேறு நெருக்கடிகள் வந்து கொண்டே இருக்கின்றன .இதற்கு காரணம் இலங்கையில் புதிய அதிபரால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் என்று கூட சொல்லலாம்.

 

இந்நிலையில் உதவ முன்வந்த பல்வேறு நாடுகள் பின்வாங்கி இருப்பதை காண முடிகிறது .உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஏனைய பணம் வழங்கும் நாடுகள் ,அதே போல் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வைத்த காலை தற்போது பின்னோக்கி வைத்திருக்கின்றன.

 

இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக ஜப்பான் அறிவித்திருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமது நாடு வழங்கிய கடன்தொகையை இலங்கை திரும்ப செலுத்த தவறியதால் இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் ஜப்பான் இடைநிறுத்தியிருப்பதாக  தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இலங்கை மத்திய வங்கி தகவலின் படி 2021 டிசம்பர் மாத இறுதியில் இலங்கை ஜப்பானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை  621 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்த ஜப்பான் நிறுவனங்களும் வெளியேறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 திட்டத்திற்கான ஒப்பந்தத்தை  ஜப்பான் நிறுவனமான தாய்சேய் செயல்படுத்தி வந்தது.இலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தாய்சேய் நிறுவனம் இலங்கையை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.இந்த தகவலை இலங்கை வர்த்தக சங்கத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ கூறியுள்ளார்..பண்டாரநாயக்க விமான நிலையத்தின் டெர்மினல் 2 திட்டத்தில், நான்கில் ஒரு பங்கு வேலைகள் மட்டுமே முடிவடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில்  ஒப்பந்ததாரரை வெளியேறாமல் வைத்திருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருந்த போதும்  ஒப்பந்ததாரரான குறித்த ஜப்பான் நிறுவனம்   இலங்கையில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு  சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தை இழுப்பறி நிலையில் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் புதிய அரசிடம் ,வாங்கிய கடன்கள் தொடர்பான திட்ட அறிக்கையை கேட்டிருந்தது. இவ்வாறு நடைமுறை சிக்கல்கள் அங்கு அதிகமாக இருப்பதால் ஜப்பான் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் இல்லாமல் அதிகளவு  நிதி உதவிகளை தாம் வழங்க முடியாது என‌ கொழும்பில் உள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாக துமிந்த ஹுலங்கமுவ குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் நிலையான  பொருளாதார திட்டத்தை வகுக்கும் வரையில் தாம் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்திருந்தது.இந்நிலையில் அமெரிக்கா  தற்போது இலங்கைக்கு நிதி உதவி அளிக்க இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சங் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு வருமானம் தரக்கூடிய அனைத்து துறைகளும் முடங்கி இருப்பதால் ,கடன் சுமை என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.