Watch Video: தந்தையின் கண் முன்னே பிரமாண்ட திமிங்கலம் ஒன்று மகனை விழுங்கிய, நொடி நேரத்தில் அதிர்ஷ்டவசமாக வெளியே துப்பியுள்ளது.


இளைஞரை விழுங்கிய திமிங்கலம்:


சிலியின் பஹியா எல் அகுயிலாவில் 24 வயது இளைஞன் தனது தந்தையுடன் கடலில் படகில் பயணித்தபடி கயாக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கூன் முதுகு திமிங்கலம் மஞ்சள் படகுடன் சேர்ந்த்து அந்த இளைஞரை விழுங்கி, அதிசயமாக அவரை வெளியே துப்பியது. அந்த ராட்சத பாலூட்டி அட்ரியன் சிமன்காஸ் எனும் இளைஞரை விழுங்கி, நொடி நேரத்தில் காயமின்றி விடுவிப்பதைக் காட்டும் ஒரு திகிலூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலியின் தெற்குப் பகுதியில் உள்ள படகோனியா பகுதியில் உள்ள மாகெல்லன் ஜலசந்தியில் உள்ள சான் இசிட்ரோ கலங்கரை விளக்கம் அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.



நடந்தது என்ன?


மற்றொரு கயாக் படகில் இருந்து இளைஞரின் தந்தை டெல் பதிவு செய்த வீடியோவில், நெருங்கி வரும் திமிங்கலத்தை அழகான அலைகள் என்று அவர் தவறாக புரிந்துகொண்டதை காண முடிகிறது. அதில், படகில் இருந்த இளைஞருக்கு அருகில் வந்த திமிங்கலம், திடீரென தனது வாயை பிளந்து படகுடன் சேர்த்து மொத்தமாக அந்த இளைஞரை தனது வாய்க்குள் அடைத்துக்கொண்டு தண்ணீருக்கு சென்றது. என்ன நடந்தது என்பதை உணர்ந்து இயல்புநிலைக்கு திரும்ப முயன்ற சில நொடிகளிலேயே, அந்த இளைஞரை திமிங்கலம் எந்தவித பாதிப்பும் இன்றி வெளியே துப்பியுள்ளது. தப்பித்த தனது மகனை தந்தை அமைதிப்படுத்த முயற்சித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.






தந்தை சொல்வது என்ன?


இந்த சம்பவம் குறித்து  பேட்டியளித்த இளைஞர், ”திரும்பிப் பார்த்தபோது, ​​அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் பின்னால் இருந்து வருவதைக் கண்டேன். நீருக்கடியில் இழுக்கப்பட்டதை உணர்ந்தேன்.  அந்த நேரத்தில், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நம்பினேன். என்ன நடந்தது என்று தெரியாமலேயே இறந்துவிடுவோமோ என்று பயந்தேன். அது ஏற்கனவே என்னைத் தின்று விழுங்கிவிட்டதாக நினைத்தேன். இருப்பினும், விரைவில் எனது உயிர்காக்கும் அங்கி என்னை மேலே இழுப்பதை உணர்ந்தேன். சில நொடிகளில், மேலே வந்து நிலைமையைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்” என்றார்.


மீண்டும் கடலுக்கு செல்வீர்களா?


மீண்டும் கயாக்கிங் மேற்கொள்ள கடலுக்கு செல்வீர்களா என்று கேட்டபோது, ​​தந்தையும் மகனும் தயக்கமின்றி, "நிச்சயமாக" பதிலளித்தனர்.  இதனிடையே, இதேபோன்ற ஒரு சம்பவம் நவம்பர் 2020 இல் கலிபோர்னியா கடற்கரையில் இருந்து இரண்டு கயாக்கர்களை திமிங்கலம் விழுங்கியபோது நிகழ்ந்தது. திமிங்கலங்கள் வெள்ளி மீன்களை உண்பதை கயாக்கர்கள் கவனித்துக் கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு திமிங்கலம் படகின் அடியில் வந்து அதனை மொத்தமாக விழுங்கியது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே இருவரையும் திமிங்கலம் துப்பியது குறிப்பிடத்தக்கது.